‘கூகல் மீட்’ காணொளி அழைப்புகளைப் பயன்படுத்தி காவல்துறையினர் போலக் காட்டிக்கொண்டு நடத்தப்படும் மோசடிச் சம்பவங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அத்தகைய 13 மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) காவல்துறை வெளியிட்ட அறிக்கை கூறியது.
அந்த மோசடிச் சம்பவங்களில் குறைந்தபட்சம் $32,000 பணத்தைப் பொதுமக்கள் இழந்துவிட்டதாகவும் காவல்துறை கூறியது.
காவல்துறையின் சீருடையை அணிந்துகொண்டு, காவல்துறை அதிகாரிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் மோசடிக்காரர்கள் கூகல் மீட் வழியாகக் காணொளி அழைப்புகளை மேற்கொள்வர்.
சில வேளைகளில், தங்களது சுயவிவரப் படமாக சிங்கப்பூர் காவல்துறையின் சின்னத்தை அவர்கள் பயன்படுத்துவர். கூகல் மீட் அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில மின்னஞ்சல் முகவரிகளில் சிங்கப்பூர் அல்லது காவல்துறை என்ற சொற்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும்.
அழைப்பை ஏற்கும் பொதுமக்களின் வங்கிக் கணக்குகள் அல்லது வங்கி அட்டை விவரங்களில் பிரச்சினை இருப்பதாகக் கூறி அதற்கான விசாரணை இது என்று மோசடிக்காரர்கள் கூறுவர்.
விசாரணைக்குத் தேவைப்படுவதாகக் கூறிய பொதுமக்களின் இணைய வங்கிப் பயனாளர் விவரங்கள், வங்கி அட்டை விவரங்கள், ஒருமுறைப் பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) ஆகியவற்றைக் கேட்டுப் பெறுவார்கள்.
வங்கிக் கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நிகழ்ந்து, பணம் மாயமான பின்னர்தான் தாங்கள் மோசடி செய்யப்பட்டது பொதுமக்களுக்குத் தெரியவரும்.
தொடர்புடைய செய்திகள்
எனவே முன்பின் அறியாத நபர்களிடமிருந்து வரும், தாங்களுக்குத் தொடர்பில்லாத காணொளி அழைப்புகள் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

