22,000 அரசாங்க ஊழியர்களுக்கு 2%-9% சம்பள உயர்வு

22,000 அரசாங்க ஊழியர்களுக்கு 2%-9% சம்பள உயர்வு

2 mins read
31807024-d81e-4680-9929-5ef33c418f39
கிட்டத்தட்ட 22,000 அரசாங்க ஊழியர்களின் சம்பளம் ஒன்பது விழுக்காடு வரை உயர்த்தப்படுகிறது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 22,000 அரசாங்க ஊழியர்களின் சம்பளம் இரண்டிலிருந்து ஒன்பது விழுக்காடு வரை அதிகரிக்கவிருப்பதாக பொதுச் சேவைத் துறை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி20) அறிவித்துள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சம்பளம் உயர்த்தப்படுவதாகக் குறிப்பிட்ட பொதுச் சேவைத் துறை, சிக்கல் நிறைந்த அனைத்துலக சூழலில் அரசாங்கத் துறையில் திறனாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் அவ்வாறு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டது.

புதிய சம்பள உயர்வால் பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்கள் பயனடைவர். இதற்குமுன் 2022ஆம் ஆண்டு சம்பளம் ஐந்து விழுக்காடிலிருந்து 14 விழுக்காடு உயர்த்தப்பட்டது.

மேலாண்மை நிர்வாகத் திட்டத்தில் உள்ள தகுதிபெறும் அதிகாரிகளுக்கான சம்பளம் இரண்டிலிருந்து ஒன்பது விழுக்காடு வரை உயர்த்தப்படும். ஏற்கெனவே அதிக தொகை பெறும் அதிகாரிகளின் சம்பளங்களில் மாற்றங்கள் செய்யப்படாது என்று பொதுச் சேவைத் துறை குறிப்பிட்டது.

தொழில்நுட்ப ஆதரவுத் திட்டத்தில் உள்ள தகுதிபெறும் அதிகாரிகளின் சம்பளங்கள் நான்கு விழுக்காட்டிலிருந்து ஒன்பது விழுக்காடு வரை உயர்த்தப்படுகிறது.

நிர்வாக ஆதரவு, நிறுவன ஆதரவுத் திட்டத்தில் உள்ள தகுதிபெறும் அதிகாரிகளின் சம்பளங்கள் நான்கிலிருந்து ஐந்து விழுக்காடு வரை உயர்த்தப்படும்.

செயல்பாட்டு ஆதரவுத் திட்டத்தின்கீழ் தகுதிபெறும் ஊழியர்களின் சம்பளங்கள் நான்கிலிருந்து எட்டு விழுக்காடு வரை உயர்த்தப்படும்.

பொதுத் துறை ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த தொழிற்சங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு மாற்றங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டதாகப் பொதுச் சேவைத் துறை சொன்னது.

சம்பள உயர்வை வரவேற்பதாகப் பொதுத் துறை ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் சஞ்சீவ் திவாரி ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.

பொதுத் துறை ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த தொழிற்சங்கத்தில் ஏறக்குறைய 23,000 ஊழியர்கள் உள்ளனர்.

சம்பள உயர்வால் குறைந்த, நடுத்தர வருமான ஊழியர்கள் அதிகம் பயனடைவர் என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு திவாரி குறிப்பிட்டார்.

தேசியச் சுற்றுப்புற வாரியத்தில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் 53 வயது திரு ராமன் காத்தரவாயன், சம்பள உயர்வு ஒரு நற்செய்தி என்றார்.

“குடும்பத்துக்கும் பிள்ளைகளின் கல்விக்கும் அது பேருதவியாக இருக்கும். மாதந்தோறும் ஏறக்குறைய $2,000யை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன். கூடுதல் தொகை பலவிதங்களில் கைகொடுக்கும்,” என்றார் திரு ராமன்.

கடும் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தேசியச் சுற்றுப்புற வாரியத்தில் உள்ள குறைந்த வருமான ஊழியர்கள் சம்பள உயர்வால் மகிழ்ச்சியடைந்ததைப் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்