சிங்கப்பூர் அதன் பொருளியல் உத்திகளைப் புதிய கண்ணோட்டத்துடன் அணுகவிருக்கிறது. ஐந்து துறைகளில் நீண்டகாலத் திட்டங்களை உருவாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் சிங்கப்பூரின் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதும் புதிய நிறுவனங்களுக்கான சூழலை மெருகேற்றுவதும் அவற்றில் அடங்கும்.
பொருளியல் உத்திகளை மறுஆய்வு செய்வது பற்றித் துணைப் பிரதமர் கான் கிம் யோங், கருவூலக் கட்டடத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து குழுக்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தார், ஊழியர்கள், மற்ற தரப்பினருடன் வரும் மாதங்களில் கலந்தாலோசிக்கும் என்றார் அவர். அடுத்த ஆண்டு (2026) நடுப்பகுதியில் பரிந்துரைகளோடு அறிக்கையொன்றை அவை வெளியிடும் என்று திரு கான் கூறினார்.
“நீண்டகால அடிப்படையில் போட்டித்தன்மையுடன் இருப்பதற்குப் பொருளியல் நகல் அறிக்கையை வரைய மறுஆய்வு உதவும். சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்க அது வழிவகுக்கும்,” என்றார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.
ஒவ்வொரு குழுவுக்கும் அரசியல் பதவி வகிக்கும் இருவர் தலைமை தாங்குவர்.
தற்போதைய மறுஆய்வு, சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவின் ஓர் அங்கமாய் அமைவதாகத் திரு கான் கூறினார். அந்தப் பணிக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார் திரு கான். உலகளாவிய பதற்றத்திற்கும் தொழில்நுட்ப இடையூறுகளுக்கும் இடையில் அமெரிக்காவின் புதிய வரிகளால் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. அதனை எதிர்கொள்ள இவ்வாண்டின் தொடக்கத்தில் பணிக்குழு உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூர் மிகவும் சவாலான நிச்சயமற்ற வருங்காலத்தை எதிர்கொண்டிருப்பதாகத் திரு கான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் அதன் வளர்ச்சிக்கு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக வர்த்தகக் கட்டமைப்பை நம்பியுள்ளது. புதிய வரிகள் அதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பொருளியலைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல நாடு புதிய வழியை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் துணைப் பிரதமர் கான் சொன்னார்.

