பெரிய குடியிருப்பு நில மறுமேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் மேம்பாட்டாளர்களுக்குக் கட்டுமானப் பணிகளைச் செய்து முடிக்கவும் வீடுகளை விற்கவும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும்.
சொத்து வாங்குவோர்க்கான கூடுதல் முத்திரை வரி விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் இதற்கு வழிவகுக்கின்றன.
தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) இந்த அறிவிப்பை வெளியிட்டார். பெரிய நில மறுமேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் கட்டுமான நிறுவனங்களுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக அவர் சொன்னார்.
புதன்கிழமை (ஜூலை 29) முதல் வாங்கப்படும் பெரிய நிலத்தொகுப்புகளுக்கு, சொத்து வாங்குவோர்க்கான கூடுதல் முத்திரை வரியில் 35 விழுக்காடு தள்ளுபடி பெறுவதற்கான கால வரம்பு நீட்டிக்கப்படுகிறது.
மறுமேம்பாட்டிற்குப் பின் 700 முதல் 1,399 வீடுகளைக் கட்டித்தரக்கக்கூடிய பெரிய நிலத் திட்டங்களுக்குக் கட்டுமானத்தை முடித்து விற்பனை செய்வதற்கான காலக்கெடு, தற்போதைய ஐந்தரை ஆண்டுகளிலிருந்து ஆறு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. அதேவேளையில், 1,400 அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தரக்கூடிய மாபெரும் நிலத் திட்டங்களுக்கான காலக்கெடு ஏழு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
பெரிய திட்டங்களை மேற்கொள்ளும் மேம்பாட்டாளர்கள், ஆறாம் ஆண்டின் இறுதியில் குறைந்தபட்சம் பாதி வீடுகளையாவது விற்க வேண்டும். தவறினால், 35 விழுக்காடு வரித் தள்ளுபடி முழுமையாகத் திரும்பப் பெறப்படும். ஏழாண்டுகளுக்குப் பிறகு அனைத்து வீடுகளையும் விற்காவிட்டாலும் இந்த வரித் தள்ளுபடி ரத்தாகும்.
பெரிய குடியிருப்புப் பேட்டைகளைப் புதுப்பிப்பதை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் எனச் சிங்கப்பூர் பொருளியல் மறுஆய்வு மாநாட்டில் அமைச்சர் சீ கூறினார்.
கூடுதல் தொழில்நுட்பச் சிக்கல்கள், உயர் உற்பத்தித்திறன் இலக்குகள் போன்ற கூடுதல் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் திட்டங்களுக்கு மேலும் ஆறு மாத கால நீட்டிப்பு வழங்கப்படும். இதன்மூலம், நிலத்தை வாங்கிய மூன்று ஆண்டுகள் வரை கட்டுமானப் பணிகளைத் தொடங்க அவகாசம் கிடைக்கும்.
அதன்படி, பெரிய திட்டங்களுக்குக் கட்டுமானத்தை முடித்து விற்க ஆறரை ஆண்டுகளும் மாபெரும் திட்டங்களுக்கு ஏழரை ஆண்டுகளும் அவகாசம் கிடைக்கும்.
தற்போது வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் நிலம் வாங்கும்போது சொத்து வாங்குவோர்க்கான கூடுதல் முத்திரை வரியாக 40 விழுக்காடு விதிக்கப்படுகிறது. அதில் 5 விழுக்காட்டு வரியைத் திரும்பப் பெற முடியாது.
எஞ்சிய 35 விழுக்காட்டு வரியைத் திரும்பப் பெற, நிலத்தை வாங்கிய ஈராண்டுகளுக்குள் கட்டுமானத்தைத் தொடங்குவது, ஐந்தாண்டுகளுக்குள் கட்டுமானத்தை முடிப்பது, அதே காலகட்டத்திற்குள் அனைத்து வீடுகளையும் விற்பனை செய்வது ஆகிய மூன்று முக்கிய நிபந்தனைகளை மேம்பாட்டாளர்கள் பூர்த்திசெய்ய வேண்டும்.

