அரசாங்கத் தலையீடு அடிப்படைப் பொருளியல் கொள்கைகளுக்கு ஏற்பவே இருக்க வேண்டும்: பிரதமர் வோங்

அரசாங்கத் தலையீடு அடிப்படைப் பொருளியல் கொள்கைகளுக்கு ஏற்பவே இருக்க வேண்டும்: பிரதமர் வோங்

‘ஏஐ’யின் தாக்கம், நிலையற்ற உலகச் சூழலின் தொடர்பில் பிரதமர் பேசினார்
படம்: சாவ்பாவ்

01 Oct 2026 - 10:03 am

2 mins read

செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுவரும் தாக்கம், நிலையற்ற உலகச் சூழல் ஆகியவற்றுக்கு இடையே எதிர்மறையாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

அதேவேளை, அரசாங்கத் தலையீடு ஒழுங்கான முறையிலும் கவனத்துடனும் இருக்கவேண்டும் என்றும் அவர் சுட்டினார். பிரச்சினையை நன்கு ஆராய்ந்து, தலையீட்டினால் பெறக்கூடிய அனுகூலங்களையும் விட்டுக்கொடுக்கவேண்டிய அம்சங்களையும் பிறகு எழக்கூடிய பின்விளைவுகளையும் அறிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொருளியல் சேவை நிகழ்ச்சியில் உரை

புதன்கிழமை (செப்டம்பர் 30) பொருளியல் சேவை அமைப்பின் 25ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் திரு வோங் பேசினார்.

பிரதமராக மட்டுமின்றி அத்திட்டத்தின் முன்னாள் பங்கேற்பாளராகவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் தாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

பொருளியலும் அரசாங்கக் கொள்கைகளும்

பொருளியல் ரீதியாகச் சிந்திப்பது எவ்வாறு அரசாங்கக் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது பற்றி உரையாற்றிய பிரதமர் வோங், மாற்றங்கள் மேலும் வேகமாக இடம்பெறும் வேளையில் கூடுதல் பாதிப்புகளுக்கும் இடையூறுகளுக்கும் சிங்கப்பூர் தயாராய் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். புத்தாக்கத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் ஊக்குவிக்கச் சில மாற்றங்கள் தேவை என்றாலும் அவற்றால் தனது வேலை தேவைப்படாமல் போகும் ஊழியருக்கு இழப்பு உடனடியாக ஏற்படுவதுடன் அவர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுகிறார் என்று அவர் விளக்கினார்.

“வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது மக்கள் தங்களின் எதிர்காலத்தை நினைத்துக் கவலைகொள்வர். அப்போது தீர்வுகளுக்காக அவர்கள் அரசாங்கத்தைத்தான் நாடுவர்,” என்று திரு வோங் விளக்கினார்.

“அதனால் இதுபோன்ற கவலைகளை நாம் கவனித்துச் செயல்படவேண்டும். மாற்றங்களால் எதிர்மறையாகப் பாதிக்கப்படுவோருக்கு நாம் உதவவேண்டும், பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் இருப்போரைப் பாதுகாக்கவேண்டும், வளர்ச்சியால் அடையும் பலன்கள் நன்கு பகிரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார் அவர்.

சிங்கப்பூர் அரசாங்கம் என்றுமே கட்டுப்பாடில்லாத அணுகுமுறையைப் பின்பற்றியதில்லை என்றும் அது தலையிடுவதற்குத் தயங்கியதில்லை என்றும் பிரதமர் வோங் சொன்னார்.

சிங்கப்பூர், எல்லாவற்றையும் சந்தை நிலவரப்படி மட்டும் இயங்க விடுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சந்தைகள் சரியாகச் செயல்படாமல் போகக்கூடும் என்பதும் சமூகத் தேவைகள் எல்லாவற்றையும் அவற்றால் நிறைவேற்ற முடியாது என்பதும் அதற்கான காரணங்கள் என்று பிரதமர் வோங் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வர்த்தகம்தலையீடுஅரசாங்கம்லாரன்ஸ் வோங்பிரதமர்உதவிசந்தை