அரசாங்கம், தொழில்துறை வளர்ச்சிக்காகக் கிட்டத்தட்ட 11.1 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியை அடுத்த ஆண்டின் (2026) முற்பாதியில் விற்பனைக்கு விடவிருக்கிறது. தொழில்துறை அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் அதற்கென எட்டுத் தளங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 29) தெரிவித்தது.
அத்திட்டத்தின்கீழ் அரசாங்கம் தொடர்ந்து போதிய அளவு நிலப்பகுதியை விற்பனைக்கு விடும் என்று அது கூறியது. சிங்கப்பூரில் தொழில்துறை வளர்ச்சிக்குப் போதிய இடம் இருப்பதை உறுதிசெய்வது நோக்கம்.
உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் ஆறு தளங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் மொத்தப் பரப்பளவு 8.58 ஹெக்டர். எஞ்சிய 2 தளங்கள், ஒதுக்கிவைக்கப்பட்ட பட்டியலில் இருக்கின்றன. அவற்றின் மொத்தப் பரப்பளவு 2.52 ஹெக்டர்.
2025இன் முற்பாதியுடன் ஒப்பிடுகையில் அடுத்த ஆண்டு தொழில்துறைக்காக ஒதுக்கப்படும் நிலப்பகுதியின் பரப்பளவு சற்றுக் குறைவு. இவ்வாண்டின் முதற்பாதியில் 14.07 ஹெக்டர் பரப்பளவு கொண்ட 10 தளங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் ஏழு, உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலிலும் மூன்று ஒதுக்கிவைக்கப்பட்ட பட்டியலிலும் இடம்பெற்றிருந்தன.
தொழிலியல் இடங்களுக்கான வாடகை அதிகரித்துவரும் நிலையில் அறிவிப்பு வந்துள்ளது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் வாடகைக் குறியீடு, ஆண்டு அடிப்படையில் 2.3 விழுக்காடு அதிகரித்தது. அக்டோபர் மாதம் ஜேடிசி கார்ப்பரேஷன் வெளியிட்ட தரவுகளில் அது தெரியவந்தது.
எல்லாத் தளங்களுக்குமான விற்பனை முகவராக ஜேடிசி செயல்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

