சிங்கப்பூரின் முதல் பிரதமரான மறைந்த லீ குவான் யூவின் 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டைத் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடு, பொது மரபுடைமைப் பூங்காவாக அமைக்கப்படக்கூடும்.
இது தொடர்பாக திங்கட்கிழமையன்று (நவம்பர் 3) அரசாங்கம் அறிவித்தது.
திரு லீயின் வீடு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இடங்கள், நினைவுச்சின்னங்களின் பழமைப் பாதுகாப்பு குறித்த தேசிய மரபுடைமைக் கழகத்தின் ஆலோசனைக் குழு மதிப்பீடு செய்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டால் அந்த இடத்தைப் பாதுகாத்துப் பராமரிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது என்று அர்த்தம் எனத் தேசிய மரபுடைமைக் கழகமும் சிங்கப்பூர் நில ஆணையமும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.
“திரு லீயின் ஆக்ஸ்லி ரோடு வீட்டை அரசாங்கம் எடுத்துக்கொண்டு அதைப் பாதுகாத்துப் பராமரித்தால் அவ்விடம் பொதுமக்களுக்கான இடமாக மாற்றியமைக்கப்படும். அது மரபுடைமைப் பூங்காவாக மாற்றியமைக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அந்த இடம் குடியிருப்பு, வர்த்தகம் அல்லது இதர தனியார் பயன்பாடுகளுக்காக மறுசீரமைக்கப்பட முடியாது,” என்று தேசிய மரபுடைமைக் கழகமும் சிங்கப்பூர் நில ஆணையமும் தெரிவித்தன.
இடங்கள், நினைவுச்சின்னங்களின் பழமைப் பாதுகாப்பு குறித்த தேசிய மரபுடைமைக் கழகத்தின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரையைத் தற்காலிகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ ஏற்றுக்கொண்டுள்ளார்.
வீடு அமைந்துள்ள இடத்தைப் பாதுகாத்து, பராமரிக்க அரசாங்கம் முடிவெடுத்தால், அங்கு இருக்கும் அனைத்துக் கட்டடங்களும் அப்படியே விட்டுவிடப்படும் என்றாகிவிடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
38 ஆக்ஸ்லி ரோட்டில் உள்ள கட்டடங்கள் எத்தகைய நிலையில் உள்ளன என்பது குறித்து ஆய்வு நடத்த இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முன்பு, விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“38 ஆக்ஸ்லி ரோடு வளாகம் சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கான அடித்தளங்களை நிறுவியது. அதன் தேசிய முக்கியத்துவம் குறித்து கழகம் ஒருமனதாக முடிவெடுத்தது. மேலும் நமது வரலாற்றில் இந்த முக்கிய கட்டத்தைப் பற்றி தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்குக் கற்பிப்பதில் இது ஒரு முக்கியமான இடைவெளியை நிரப்புகிறது,” என்று தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களின் பழமைப் பாதுகாப்புப் பிரிவு ஆலோசனைக் குழுத் தலைவரான திரு டான் கோக் ஹியாங் கூறினார்.
திரு லீ, 1950ஆம் ஆண்டு முதல் 2015ல் அவர் இறக்கும் வரை இந்த வீட்டில் வசித்து வந்தார்.
வலுவான தேசிய முக்கியத்துவமும் சிறந்த வரலாற்றுத் தகுதியும் உள்ள வளாகம்
1950களில் சிங்கப்பூர் ஒரு காலனித்துவத்திலிருந்து சுதந்திர நாடாக மாறியதைக் குறிக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு இந்தத் தளம் முக்கிய இடமாக விளங்கியது. மேலும் இது திரு லீயின் வீடு என்பதை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தேசிய மரபுடைமைக் கழகத்தின் தளங்கள், நினைவுச்சின்னங்களின் பழமைப் பாதுகாப்புப் பிரிவின் ஆலோசனைக் குழு கூறியது.
“அங்கு எடுக்கப்பட்ட மிக முக்கியமான, சிங்கப்பூர்மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய முடிவுகளுடன் இந்த எளிமையான கட்டடங்கள் வேறுபடுகின்றன,” என்று அக்குழு தனது மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த இடம் சிங்கப்பூரின் சுதந்திரக் கதையின் அடித்தளமாக விளங்குகிறது. இதை வேறு எந்த தளத்தாலும் அல்லது நினைவுச்சின்னத்தாலும் நிறைவுசெய்ய இயலாது,” என்றும் குழு கூறியது.
“எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டின் அடித்தளத்தில் கூடியிருந்த தனிநபர்கள் அந்த சகாப்தத்தின் அரசியலில் முக்கிய பங்கு வகித்தனர், நாட்டின் தலைவிதியை மாற்றினர்,” என்று அது கூறியது.
குறிப்பாக, 1950களில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) முன்னோடித் தலைவர்கள் ஓர் அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்க வீட்டின் அடித்தள சாப்பாட்டு அறையில் கூடினர்.
1955 சட்டமன்றத் தேர்தலில் மசெக போட்டியிட்டது. திரு லீயின் வீடு அப்போது மசெவின் தேர்தல் தலைமையகமாகவும் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

