சிறந்த கொள்கைகளை அமைக்க நெடுநாள் அனுபவம் முக்கியம் என்ற காலம் மாறிவிட்டது என்றும் சவால்களை வேறுபட்ட கோணங்களிலிருந்து ஆராயக்கூடிய இளையர்களாலும் நல்ல யோசனைகளை வழங்கமுடியும் என்றும் கூறியுள்ளார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) தேசிய இளையர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதல் இளையர் கொள்கை மாநாட்டின் நிறைவு அங்கத்தில் இளையர்களுடன் அவர் பங்கேற்ற கலந்துரையாடலில் இக்கருத்தை முன்வைத்தார்.
“இன்றைய இளையர்கள் முந்தைய தலைமுறையினரைவிட மாறுபட்டவர்கள். அவர்கள் செய்திகளை உணரும் விதம் மாறுகிறது. அவர்கள் நிலையிலிருந்து எப்படி சிங்கப்பூரைப் பார்க்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
“கொள்கை அமைப்பதில் பங்காளிகளாக இளையர்கள் முன்வரவேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, அதற்கான இடத்தையும் நாங்கள் வழங்கவேண்டும். இருவழிப் பகிர்வு முக்கியம்.
“ஏனெனில், அப்போதுதான் இளையர்களுக்குத் தங்கள் கொள்கைகளால் ஏற்படக்கூடிய எதிர்கால விளைவுகள், அதைச் சார்ந்த அனைத்துலகக் கோட்பாடுகள் போன்றவை பற்றிய புரிதல் ஏற்படும்,” என மாநாட்டின் நோக்கத்தை விவரித்தார் அமைச்சர் டோங்.
அவருடன் நான்கு இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பார்வையாளர்களும் கேள்விகள் எழுப்பினர்.
தம் நெருங்கிய சுற்றத்தில் வலுவான ஆதரவு கிடைக்காமல் சிரமங்களை எதிர்நோக்குவோரின் தனிப்பட்ட சவால்களை அரசாங்கக் கொள்கைகள் எவ்வாறு மேலும் கருத்தில் கொள்ளமுடியும் எனக் கேட்டார் சிறுவயதில் பகடிவதையால் கல்வியில் பாதிப்படைந்த ஓர் இளையர்.
அதற்கு அமைச்சர் டோங், உலகம் முழுவதும் பெரும்பான்மையினரின் அடிப்படையிலேயே அரசாங்கக் கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் சிங்கப்பூரில் சிறுபான்மையினரின் தனிப்பட்ட சூழல்களுக்காக அனைத்து முக்கியக் கொள்கைகளிலும் சட்ட வழிவகைகள் உள்ளதாகவும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
முன்பு விதிவிலக்குகளாகக் கருதப்பட்ட சூழல்கள் உண்மை நிலவரம் என ஏற்கப்படும்போது கொள்கைகள் மாற்றப்படவும் செய்கின்றன என்ற அவர், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் ஒற்றையருக்கான திட்டங்கள் மேம்பட்டுள்ளதை எடுத்துக்காட்டாகச் சுட்டினார்.
“சுற்றுப்புறம் சார்ந்தவற்றில் பல இளையர்கள் தொண்டூழியம் புரிகின்றனர். ஆனால், பொதுச் சுகாதாரத்தில் பல விதிமுறைகள் இருப்பதால் பலரும் முன்வருவதில்லை. இத்தடைகளைத் தகர்க்க என்ன செய்யலாம்?” என வினவினார் ஒரு பார்வையாளர்.
“சிங்கப்பூர் அமைப்புகளின் அளவில் இளையர் பிரதிநிதித்துவத்தில் தடைகள் இல்லை. சுகாதாரத்தில் ஐக்கிய நாடுகள் வரை சிங்கப்பூர் இளையர்களின் பிரதிநிதித்துவம் உள்ளது,” என்று கூறிய அமைச்சர் டோங், சுகாதார அமைச்சுடன் ஒன்றுபட்டு செயல்பட ஊக்குவித்தார்.
வேலையிடத்தில் அனுபவம் போதாததால் இளையர்கள் பாகுபாடு காண்கின்றனரா? அரசாங்கத் துறையினருக்கும் இளையர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளியை எவ்வாறு குறைப்பது? சிங்கப்பூரர்கள் வெளிப்புற உந்துதல்களையே நம்பியிருக்காமல் தங்களுக்குள்ளிருந்து உத்வேகம் பெறச் செய்ய அரசாங்கம் என்ன திட்டமிடுகிறது? போன்ற பல கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார்.
சிறந்த கொள்கைகளை அமைக்க இளம் தலைவர்களின் அறிவுரைகள்
“கொள்கைகள் உண்மையிலேயே நடைமுறையில் வேலை செய்கின்றனவா என்பதைக் கண்டறிய இளையர்கள் தொண்டூழியத்தில் ஈடுபடவேண்டும்,” என்றார் கலந்துரையாடலில் பங்கேற்ற சிண்டா இளையர் மன்ற இளையர் ஈடுபாட்டுத் தலைவர் தாட்சாயனி ஸ்கந்தகுமார்.
“இளையர்கள் நன்கு செவிசாய்க்க வேண்டும். அப்போது உங்களுக்கே பல புதிய யோசனைகள் எழும்,” என்றார் மாநாட்டின் வேலைவாய்ப்பு இளையர்க்குழு உறுப்பினர் முகமது ஐசாம்.
“சிங்கப்பூரில் சமூகத்திலிருந்து தொடங்கிய பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் பங்கேற்று, வெவ்வேறு பின்னணிகளைச் சார்ந்த மக்களுடன் கலந்துரையாடுவது இளையர்களுக்கு உதவும்,” என்றார் மாஜு எனும் இளையர் கொள்கை ஆய்வுத் திட்டத்தின் நிர்வாகத் தலைவர் கரேந்திர் கோர் ஷனா.

