கூடுதல் ஆதரவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார்: பிரதமர் வோங்

கூடுதல் ஆதரவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார்: பிரதமர் வோங்

2 mins read
2c85e66c-820f-4efa-8989-73a99cbdd427
கூடுதல் நடவடிக்கைகளை உறுதியாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்த அரசாங்கத்திடம் வளங்கள் இருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

மத்திய கிழக்கில் உள்ள நிலைமையைத் தொடர்ந்து, தேவை ஏற்பட்டால், வரவுசெலவுத் திட்டம் 2026ல் அறிவிக்கப்பட்டதற்கு அப்பால், கூடுதல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் தயாராக இருப்பதாய் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

அவற்றை உறுதியாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்த அரசாங்கத்திடம் வளங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், இப்போதைக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் விளைவுகளை குடும்பங்களாலும் தொழில்களாலும் விரைவில் உணரமுடியும் என்றார் அவர்.

பயனீட்டுக் கழிவுகள், வெவ்வேறு தொழில் உதவித் திட்டங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

“முதலில், இவை நடைமுறைப்படுத்தப்படுவதைக் காண விரும்புகிறோம்,” என்று திரு வோங் கூறினார்.

“அதன் பிறகு, நாம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிப்போம். நிலைமை மாறிக்கொண்டேதான் இருக்கிறது.

“நடக்கக்கூடிய வெவ்வேறு சாத்தியங்களையும் எதிர்பாரா நிகழ்வுகளையும் நாம் ஆராய்கிறோம்,” என்று அவர் சொன்னார்.

ஜப்பானுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் சென்றுள்ள திரு வோங், சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

எரிசக்தி விலைகள் அதிகரித்துவரும் நிலையில், சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் உதவி வழங்குவது குறித்து ஆராயப்படுகிறதா என்ற கேள்வி திரு வோங்கிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்குப் பதிலளிக்கையில், அமெரிக்க ராணுவ நடவடிக்கை சில வாரங்களில் முடிவுக்கு வரும் என முதலில் கூறப்பட்டது என்றும் ஆனால், இப்போது அது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளதால், தற்போதைய நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது என்றும் திரு வோங் கூறினார்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கின. அதன் பிறகு, ஈரான் பதிலடித் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், எண்ணெய்ப் போக்குவரத்துக்கு முக்கியக் கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணையையும் கப்பல் போக்குவரத்துக்கு மூடியது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நிறுத்தப்படுமா என்பதுதான் முக்கியக் கேள்வி என்றார் திரு வோங்.

“ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ந்து தடை நீடித்தால், ஒட்டுமொத்த உலகப் பொருளியலில் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும்,” என்றார் அவர்.

எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைத் தாண்டி, உரம், உணவு விநியோகம், ஹீலியம் போன்ற துறைகளிலும் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

‘எம்ஆர்ஐ’ இயந்திரங்களிலும் பகுதிமின்கடத்தித் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படும் உலகிற்கான ஹீலியம் அளவில் 30 விழுக்காடு அந்நீரிணை மூலம் வருவதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்