மசே நிதி ஓய்வூதிய முதலீடு திட்டம் குறித்து தொடர் ஆலோசனையில் அரசு: பிரதமர்

2 mins read
2049683b-6716-4357-b81a-88023f29efbb
அதிகரித்து வரும் மருத்துவச் செலவைச் சமாளிப்பது குறித்து அரசு காப்புறுதி நிறுவனங்கள், மருத்துவமனைகளுடன் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. - படம்; பிஸ்னஸ் டைமஸ்

மத்திய சேம நிதியின் ஓய்வூதிய கணக்கில் இருக்கும் நிதியைக் குறைந்த அளவிலான இடர்பாட்டுடன் அதிக லாப ஈவு தரும் வகையில் அதை முதலீடு செய்யும் திட்டம் குறித்து சிங்கப்பூர் தொடர்ந்து பரிசீலித்து வருவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இத்தகைய திட்டம் விருப்ப அடிப்படையில் சேரும் முதலீட்டு திட்டமாக இருக்கும். அவ்வாறு வடிவமைக்கப்படும் சிங்கப்பூரர்கள் தேர்வு செய்யக்கூடிய பங்கு முதலீடாக மட்டுமில்லாமல் முறையாக நிர்வகிக்கப்படும் நிதியாகவும் இருத்தல் வேண்டும் என்று திரு வோங், சீன செய்தித்தாள் சாவ் பாவுக்கு அளித்த நேர்காணலில் விளக்கினார். அவருடைய நேர்காணல் விவரம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7ஆம் தேதி) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

“இதில் இருக்கும் சவால் என்னவென்றால்,அரசாங்கம் ஏற்கெனவே வழங்கி வரும், இடர்பாடு இல்லாத, உறுதியான லாப ஈவு தரும் திட்டத்தைவிட அதிக லாபம் தரும் திட்டமாக இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது என்பதே,” என்று அவர் விளக்கினார்.

“அப்படியான ஒரு திட்டம், ஏற்ற இறக்கமான லாப ஈவு ஒருபுறமும், மறுபுறம் மசே நிதி உறுப்பினர்களுக்கு, குறிப்பாக அவர்கள் ஓய்வுபெறும் வேளையில் இடர்ப்பாடும் அடங்கிய ஒரு திட்டமாக இருந்துவிடுமோ என்ற கேள்வி எழுகிறது,” என்று திரு வோங் தெரிவித்தார்.

இப்படியான ஒரு திட்டத்தை அரசாங்கம் சில ஆண்டுகளுக்கு முன் பரிசீலித்து வந்ததாகவும் நிதியமைச்சராகவும் உள்ள பிரதமர் கூறினார்.

ஓய்வுக்காலத்தில் நிதித் தேவை குறித்த பரந்த அளவிலான நேர்காணலில், பாதிப்படையக்கூடிய தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது, வீடு வாங்க, ஓய்வூதிய தேவைக்குச் சேமித்து வைப்பது, தங்கள் மசே நிதி மீது மக்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது போன்ற பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் வோங் பேசினார்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்மத்திய சேம நிதிமுதலீடு