தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்க்கைச் செலவின சமாளிப்பு, மூத்தோர் பராமரிப்பு குறித்து ஆய்வு: பிரதமர் வோங்

3 mins read
da6f7d30-4076-4185-914c-d4b795231e9d
பிரதமராகப் பதவியேற்ற பிறகு நடைபெற்ற தமது முதலாவது செய்தியாளர் சந்திப்பில் திரு லாரன்ஸ் வோங். - படம்: சாவ் பாவ்

வாழ்க்கைச் செலவினக் கவலைகளைச் சமாளிப்பதும் மூத்தோரை மேலும் சிறந்த முறையில் பராமரிப்பதும் அரசாங்கம் கவனம் செலுத்தும் இரு முக்கிய அம்சங்கள் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டுள்ளார்.

மூத்தோருக்கான நீண்ட கால பராமரிப்பு குறித்தும் அவர்களின் வீடமைப்புத் தேவைகள் குறித்தும் தாம் ஆராய்ந்துவருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதிகமானோர் மூப்படையும்போது இந்தத் தேவை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டினார்.

தமது முதல் தேசிய தினப் பேரணி உரையை நிகழ்த்திய ஐந்து நாள்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

70, 80 வயதுகளில் உள்ள மூத்தோருக்கு உதவுவதுடன் அவர்களது பிள்ளைகளுக்கும் ஆதரவு இருக்கும் என்று நம்பிக்கை அளித்தார். அதாவது ‘இளம் மூத்தோர்’ என்று வருணிக்கப்படும் 50களில் உள்ளோரைப் பற்றி அவர் பேசினார்.

“வயதான பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய நிலையும் இருக்கும். தங்களின் பிள்ளைகளையும் அவர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்று இருவேறு தேவைகளைக் கொண்ட அந்த நடுநிலை ‘இளம் மூத்தோரின்’ கவலைகளை பிரதமர் மேற்கோள் காட்டினார்.

வாழ்க்கைச் செலவினம் குறித்து பேசிய பிரதமர், பெரிய குடும்பங்கள், இளம்பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் போன்ற செலவு கணிசமாக அதிகரிக்கும் இயல்புடைய குறிப்பிட்ட அங்கத்தினருக்கு கூடுதல் உதவி வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்வதாகச் சொன்னார்.

குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கான சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள், வாழ்க்கைச் செலவின வழங்கீடு, யூ-சேவ் கழிவுகள் போன்ற விரிவான முறையில் வழங்கப்படும் உதவித் திட்டங்களுக்கு மேல் இந்தக் கூடுதல் உதவி வழங்கப்படும்.

பிரதமராகப் பதவியேற்று 100 நாள்கள் முடிவடைந்த நிலையில் பிரதமர் தமது முதலாவது செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சில் அமைந்துள்ள தேசிய செய்தியாளர் மையத்தில் நடைபெற்ற சந்திப்பில் தேசிய தினப் பேரணி உரையைத் தயார்செய்தது குறித்தும் வரும் மாதங்களில் சிங்கப்பூரர்கள் எதிர்பார்க்கக்கூடியவை குறித்தும் அவர் பகிர்ந்தார்.

‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின்மூலம் சிங்கப்பூரர்களிடமிருந்து கேட்டறியப்பட்ட கருத்துகளைக் கொண்டு அவர்களது நம்பிக்கை, விருப்பங்களை அடைய திட்டங்களைத் தீட்டியதாகப் பிரதமர் சொன்னார்.

எதிர்கால விருப்பங்களுக்கும் நம்பிக்கைக்கும் அடித்தளமாக புதுப்பிக்கப்பட்ட சமூகக் கட்டிறுக்கமும் புத்துயிரூட்டப்பட்ட சிங்கப்பூர் கனவும் இரு முக்கிய தூண்களாக அமையும் என்றார்.

தடைகள் ஏற்பட்டாலும் வாழ்க்கையில் சம வாய்ப்புகள் கிடைக்க ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் ஆதரவு வழங்கப்படுவதை புதுப்பிக்கப்பட்ட சமூகக் கட்டிறுக்கமாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

அனைவரும் அவரவர் பங்கை ஆற்றவேண்டும், கடினமாக உழைக்கவேண்டும், முயற்சியைக் கொண்டு உன்னதமடையவேண்டும், அவரவர் குடும்பங்களைத் தூக்கிவிடவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். “அவ்வாறு அவர்கள் செய்தால், ஒவ்வொரு படிநிலையிலும் அவர்களுக்குக் கைதூக்கிவிட்டு முன்னேற அரசாங்கம் உறுதுணையாக இருக்கும்,” என்றார் திரு வோங்.

மற்றொருவருடன் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் அவரவர் தனிப் பாதையை உருவாக்கிக்கொள்வதையே புத்துயிரூட்டப்பட்ட சிங்கப்பூர் கனவாக அவர் விளக்கினார்.

இந்த இரு இலக்குகளையும் அடைய கொள்கைகளில் பெரிய அளவிலான மறுதொடக்கமும் மனப்போக்கு மற்றும் சிந்தனையில் மாற்றமும் தேவை என்றும் அவர் சுட்டினார்.

மூத்தோர் குறித்தும் வாழ்க்கைச் செலவினம் குறித்தும் ஆய்வு செய்வதைத் தாண்டி சிங்கப்பூரர்களின் அக்கறைக்குரிய அம்சங்களையும் தமது அரசாங்கம் அடையாளம் காணும் என்று நம்பிக்கையளித்தார். அதனால் சிங்கப்பூரர்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் தமது பணியில் இன்றியமையாத அம்சம் என்றார் பிரதமர்.

கூடுதல் செய்தி: பக்கம் 2

குறிப்புச் சொற்கள்