ஓய்வுக்காலத்தில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், சிங்கப்பூரர்கள் போதிய சேமிப்புடன் கண்ணியமாக ஓய்வுபெறுவதை உறுதிசெய்வதற்கான வழிமுறைகளை அரசாங்கம் ஆராயும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
“குறிப்பாக, தங்களது பணிக்காலத்தின்போது கூடுதலாகச் சேமிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவ விரும்புகிறோம். அதன்மூலம், ஓய்வுக்காலத்திற்கும் நீண்டகாலம் வாழவும் தங்களது அடிப்படைத் தேவைகளுக்குப் போதுமான சேமிப்பு அவர்களிடம் இருக்கும்,” என்று பிரதமர் வோங் கூறினார்.
அதிபர் உரை மீதான விவாதத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை (செப்டம்பர் 24) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது திரு வோங் இவ்வாறு சொன்னார்.
எவ்வளவு முயன்றும் ஓய்வுக்காலத்திற்குப் போதுமான அளவில் சேமிக்க இயலாதோர்க்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவு வழங்கும்.
சிறப்புத் தேவையுடைய குழந்தைகள், உடற்குறையுள்ளோர் உட்பட கூடுதல் உதவி தேவைப்படுவோர்க்கான ஆதரவுத் திட்டங்களும் வலுப்படுத்தப்படும்.
பின்னடைவை எதிர்கொள்வோர்க்கு ஆதரவு வழங்குவதற்காக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடுவோர் ஆதரவுத் திட்டம் போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அத்தகைய திட்டங்கள் வருமான ஏற்றத்தாழ்வின்மீது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாகப் பிரதமர் வோங் தெரிவித்துள்ளார்.
வருமான ஏற்றத்தாழ்வை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ‘கினி எண்’ (Gini coefficient) கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்போதுதான் ஆகக் குறைந்த அளவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதுபோல, மத்திய சேம நிதிக் கணக்குகளில் அவ்வப்போது பணம் நிரப்புதல், பொது வீடமைப்பு போன்ற வழிகளில் சொத்துச் சமனின்மையை மட்டுப்படுத்துவதற்கான திட்டங்களும் நடப்பில் உள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வருமான, சொத்து ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் அரசின் நடவடிக்கைகள் கைகொடுத்து வருவதாகத் திரு வோங் கூறினார்.
முன்னணி உலக நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து புதிய முதலீடுகளை ஈர்ப்பதை உறுதிசெய்வதுடன் தொழில்முனைப்புச் சூழலை வலுப்படுத்துவதற்கான தேவையும் இருப்பதாக அவர் சொன்னார்.
“புதிய நிறுவனங்களுக்கும் வளர்ந்துவரும் உலக நிறுவனங்களுக்கும் ஈர்ப்புமிக்க இடமாக சிங்கப்பூரை உருவாக்க விரும்புகிறோம்,” என்றார் திரு வோங்.
வெளிநாடுகளில் தொழில்செய்ய விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களும் ஆசியாவில் காலூன்ற விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களும் அவற்றில் அடங்கும்.
அது நன்றாகச் செயல்பட சிங்கப்பூருக்கு மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
வெற்றிகளைக் கொண்டாடும் அதே வேளையில், தோல்விகளையும் பின்னடைவுகளையும் ஏற்றுக்கொள்வதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த அணுகுமுறை.
“அது சிரமமாகவும் தொந்தரவாகவும் இருக்கலாம். ஆயினும், புதிய மதிப்பை உருவாக்க அது அவசியம். அதன் விளைவாக, சிங்கப்பூரர்களுக்குப் புதிய, சிறந்த வேலைகளை உருவாக்கலாம்,” என்று திரு வோங் தெரிவித்தார்.