சிங்கப்பூர் சமுதாய ஒருங்கிணைப்பு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் மட்டுமின்றி, மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் உள்ளது. அந்த அடிப்படையில் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசாங்கம் உதவி அளித்து வருவதாக கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் வியாழக்கிழமை (ஜூன் 26) தெரிவித்தார்.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சமுதாயத்திற்கான அனைத்துலக மாநாட்டின் இறுதி நாளில் திரு தினேஷ் இதனைத் தெரிவித்தார்.
“கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் அடைந்தபோது, ரத்தக்கசிவு, பிரிவினைவாதம், தத்தளிப்பு ஆகியவற்றுடன்தான் எங்கள் பயணம் தொடங்கியது,” என்று திரு தினேஷ் கூறினார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வழிகாட்டுதல்படி, சிங்கப்பூர் சீன நாடோ, மலாய் நாடோ, இந்திய நாடோ கிடையாது, மாறாக அது சிங்கப்பூர் நாடு என்றும் திரு தினேஷ் கூறினார்.
“எனவே, கொள்கை வகுப்பைப் பொறுத்தவரை கட்டுமானக் கற்கள் தொடக்கக் காலத்திலேயே வைக்கப்பட்டிருந்தன,” என்று அவர் கூறினார்.
இன, மொழி, சமயச் சார்பற்ற ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்கும் தேசியப் பற்றுறுதியை சிங்கப்பூர் மாணவர்கள் எடுத்து வருவதாக, பல்வேறு நாடுகளிலிருந்து திரண்டிருந்த நல்லிணக்கப் பேராளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பாக அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாக அமைத்துள்ள மூன்று முக்கிய தூண்களைத் திரு தினேஷ் தம் உரையில் விவரித்தார்.
வன்பொருள் (hardware) எனப்படும் அரசாங்கக் கொள்கைக் கட்டமைப்பு, முதல் தூணாகும். “இன ஒருங்கிணைப்புக் கொள்கை வழியாக நாம், சமூக ஒருங்கிணைப்பை உருவாக்கினோம்,” என்று கூறிய திரு தினேஷ், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வெவ்வேறு இனங்கள் ஒருங்கிணைக்கப்படுவதைச் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தின் பயன்பாட்டை இரண்டாவது தூணாகவும் ஆண்களுக்கான தேசியச் சேவைக் கொள்கையை மூன்றாவது தூணாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சேவை எல்லாரையும் ஒருங்கிணைப்பதாகக் குறிப்பிட்ட திரு தினேஷ், அடுத்த வாரம் தம் மகனும் தேசிய சேவை செல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார். அதற்காக அவர் ஆவலுடன் காத்திருப்பதாகவும் திரு தினேஷ் கூறினார்.
சுயஉதவிக் குழுக்களுக்கு சிங்கப்பூரில் நிறைய ஆதரவு இருப்பதைத் திரு தினேஷ் சுட்டினார். சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தொண்டூழியராகத் தாம் இருந்ததைக் குறிப்பிட்ட திரு தினேஷ், கல்வித்துறையில் செயலாற்றியதுடன் வசதி குறைந்தோருக்குக் கைகொடுத்து வருவதாகவும் கூறினார்.
“சிங்கப்பூர் கடந்த 60 ஆண்டுகளாகச் செய்து வந்தது பாராட்டுக்குரியது என்றாலும் நம் எல்லாரும் கூடுதலாகச் செய்யலாம். அரசாங்கம் மேலும் செய்யவேண்டும். தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், குறிப்பாக நம் சமய அமைப்புகள் ஒன்றாக முன்வந்து செயலாற்றவேண்டும்,” என்று திரு தினேஷ் கேட்டுக்கொண்டார்.