மக்கள் செயல் கட்சி அரசாங்கம் சிங்கப்பூரர்களின் வாழ்க்கை, எதிர்காலத்துடன் விளையாடாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அதனால், ஒவ்வோர் ஆண்டும் அது தனது நிதி நிலைமையை ஆரோக்கியமாக வைத்து, கட்டுப்படியாகக்கூடிய நிலையில் தனது செலவினத்தை வைத்திருக்கும் என்றும் அவர் விளக்கினார்.
வரவுசெலவுத் திட்டம் குறித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குறைகூறல்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், வலுவான உபரி நிதி நிலைமை ஏதோ தவறானதாக சித்திரிக்கப்படுவதாகக் கூறினார்.
“அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையே ஓர் இடைவெளியை உருவாக்க முயற்சி செய்ய வேண்டாம். வலுவான நிதி நிலைமை சிங்கப்பூரர்களுக்கு எதிரானதன்று. பார்க்கப்போனால், அது பல வகைகளில் சிங்கப்பூரர்களுக்கு உதவுகிறது. ஏனெனில், அதைக் கொண்டு சிங்கப்பூரர்களுக்காக மேலும் உதவி செய்ய முடிகிறது,” என்று அவர் விளக்கமளித்தார்.
வரவுசெலவு விவாதத்தில் ஒருமணி நேரம் பங்கேற்றுப் பேசிய பிரதமர், உபரி நிதியாக $6.4 பில்லியன் இருக்கும்போது அரசாங்கம் பொருள், சேவை வரியை முன்கூட்டியே உயர்த்தியுள்ளது குறித்து எதிர்க்கட்சிகளின் கூற்றுக்கும் பதிலளித்தார்.

