கல்வி, உள்கட்டமைப்பில் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்யும்: பிரதமர் வோங்

கல்வி, உள்கட்டமைப்பில் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்யும்: பிரதமர் வோங்

2 mins read
b90c7297-2b0c-459c-a575-ab447fb68415
புதுப்பிக்கப்பட்டுள்ள ஃபூச்சுன் சமூக மன்றத்தின் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சவாலான பொருளியல் சூழலில் குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி வழங்கும் இவ்வேளையிலும் அரசாங்கம் சிங்கப்பூரர்களுக்காகத் தொடர்ந்து கல்வி, வீடமைப்பு, பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்யும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) மார்சிலிங்கில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஃபூச்சுன் சமூக மன்றத்தின் திறப்பு நிகழ்ச்சியில் திரு வோங் பேசினார். சிங்கப்பூரர்கள் அக்கறை கொண்டுள்ள அத்தியாவசிய அம்சங்களில் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கூடுதல் உதவி

சவாலான காலங்களில் அரசாங்கம் கூடுதல் உதவி வழங்குவதையும் அவர் சுட்டினார். மத்திய கிழக்குப் பூசலால் அதிகரித்துள்ள செலவுகளைக் கையாள இவ்வாண்டு வழங்கப்பட்டிருக்கும் ஆதரவை திரு வோங் குறிப்பிட்டுப் பேசினார். சிடிசி பற்றுச்சீட்டுகள், யு-சேவ் தள்ளுபடிகள் ஆகியவை அந்த ஆதரவு நடவடிக்கைகளில் அடங்கும்.

எனினும், மேலும் வலுவான சிங்கப்பூரை உருவாக்கும் பொறுப்பு அரசாங்கத்துடையது மட்டுமல்ல என்பதையும் பிரதமர் வோங் வலியுறுத்தினார்.

“வலுவான சமூகம் என்பது அண்டைவீட்டார் ஒருவருக்கொருவர் உதவுவது, அந்தந்த வட்டாரத்தில் குடியிருப்பாளர்கள் பொறுப்பேற்றுக்கொள்வது, தொண்டூழியர்களாகச் செயல்பட குடியிருப்பாளர்கள் முன்வருவது, சமூகத்துக்குத் தங்களின் பங்கை ஆற்ற அடித்தளத் தலைவர்கள் முன்வருவது ஆகியற்றின் மூலம் உருவாகிறது,” என்று அவர் விவரித்தார்.

ஃபூச்சுன் சமூக மன்றம்

ஃபூச்சுன் சமூக மன்றத்தின் வரலாறு சிங்கப்பூரின் வளர்ச்சியைச் சித்திரிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாகவும் திரு வோங் சொன்னார்.

அந்த சமூக மன்றம், ஆரம்ப காலத்தில் ஹோக் சூன் வில்லேஜ் கம்பத்துடன் தொடர்புகொண்டிருந்தது. பிறகு அது ஹோக் சூன் சமூக மன்றம் என்ற பெயரில் அன்றைய பிரதமர் லீ குவான் யூவால் திறந்துவைக்கப்பட்டது.

சுய ஆட்சியை அமைத்துக்கொள்ளும் உரிமை சிங்கப்பூருக்கு வழங்கப்பட்டு மூவாண்டுகளுக்குப் பிறகும் தீவு முழுவதும் சமூக நிலையங்களை அமைக்கும் நோக்கில் மக்கள் கழகம் தொடங்கப்பட்டு ஈராண்டுகளுக்குப் பிறகும் ஹோக் சூன் சமூக மன்றம் திறக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட ஃபூச்சுன் சமூக மன்றத்தின் திறப்பு நிகழ்ச்சியில் 600க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர். அந்த சமூக மன்றத்துக்கான மேம்பாட்டுப் பணிகள் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கின.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்லாரன்ஸ் வோங்உதவிஆதரவுசிடிசியு-சேவ்