செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளையும் மாற்றியமைத்துவரும் வேளையில், ஒவ்வொரு வேலையையும் அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாமல் போகலாம்; ஆனால், ஒவ்வோர் ஊழியரையும் அரசாங்கம் நிச்சயம் பாதுகாக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியளித்துள்ளார்.
மே 1ஆம் தேதி நடைபெற்ற வருடாந்தர மே தினப் பேரணியில் அவர் உரையாற்றினார். டௌன்டவுன் ஈஸ்ட்டில் நடைபெற்ற பேரணியில் தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட 1,600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் தமது உரையில், செயற்கை நுண்ணறிவு மாற்றத்திற்கு ஊழியர்களுக்கு உதவும் வகையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனப் பயிற்சிக் குழுக்களின் (CTC) எண்ணிக்கையை அதிகரிக்கச் சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
நிறுவனப் பயிற்சிக் குழுக்கள்
கடந்த 2019 பிப்ரவரியில் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) முன்மொழிந்த ‘சிடிசி’ திட்டம், நிறுவன நிர்வாகத்தையும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் ஒன்றிணைக்கிறது.
நிறுவனங்கள் நவீன முறையில் வளர்ச்சியடையும்போது, ஊழியர்களுக்குத் தேவைப்படும் புதிய திறன்களைக் கண்டறிந்து, அதற்கேற்பப் பயிற்சிகளையும் பணி மாற்றங்களையும் திட்டமிடுவது இக்குழுக்களின் நோக்கமாகும். இதுவரை 3,800க்கும் அதிகமான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வர்த்தக உருமாற்றம் அல்லது பயிற்சிகளுக்கான தகுதிபெறும் செலவுகளில் 70 விழுக்காடு வரை இக்குழுக்கள் மானியமாகப் பெற முடியும். 2026ஆம் ஆண்டு நிலவரப்படி, 900க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இத்தகைய மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
‘சிடிசி’ திட்டம் நல்ல பலனை அளித்திருப்பதால் அரசாங்கம் அதைத் தொடரும் என்றார் திரு வோங்.
வேலைகளுக்கான முத்தரப்பு மன்றம்
செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு சவால்கள் இருப்பதால், அனைவருக்குமான பொதுவான தீர்வு என்பது சாத்தியமில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், “தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் இணைந்து செயல்படுவதன் மூலம், செயற்கை நுண்ணறிவை உள்வாங்கிப் பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஊழியர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இதன் காரணமாகவே, அரசாங்கம், என்டியுசி, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து வேலைகளுக்கான முத்தரப்பு மன்றத்தை (Tripartite Jobs Council) அமைத்துள்ளன என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இக்குழு, வளங்களை ஒன்றிணைத்து, முயற்சிகளை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவு மாற்றத்தை வழிநடத்தும். செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய ஊக்குவிப்பு ஊழியர்களுக்குப் பலனளிப்பதை அது உறுதிசெய்யும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
“இடையூறுகளே இருக்காது என்று கூறமாட்டேன். ஆனால், நாட்டின் பொருளியல் உருமாற்றம் அடையும் வேளையில் புதிய, மேம்பட்ட வேலைகளை உருவாக்குவோம் என்று உறுதியளிக்கிறேன். ஒவ்வொரு வேலையையும் எங்களால் பாதுகாக்க முடியாமல் போகலாம். ஆனால், ஒவ்வோர் ஊழியரையும் பாதுகாப்போம்,” என்று பிரதமர் கூறினார்.
ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான ஆதரவையும் கருவிகளையும் பாதைகளையும் அரசாங்கம் வழங்கும் என்று கூறிய அவர், சிங்கப்பூரர்கள் அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்று, பயன்படுத்த முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

