தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தேவையேற்பட்டால் கூடுதலான சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்’

2 mins read
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தகவல்
3eb02ffd-2880-4cbf-bc4f-17b7873e77ca
தனியார் அல்லது வீவக வீட்டு விலை விரைந்து அதிகரிக்கும் நிலை ஏற்படாமலிருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேவை ஏற்பட்டால் கூடுதலான சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

சொத்துச் சந்தையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட தடைகளை அகற்றுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றார் அவர்.

ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்ற ஊடக நேர்காணலில், அரசாங்கம் கடந்த பல ஆண்டுகளில் மேற்கொண்ட முயற்சிகள் மூலம் கட்டுப்படியான விலையில் வீடு கிடைப்பது தொடர்பான கவலைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கம் இதன் தொடர்பில் மேற்கொண்ட முயற்சிகளை அமைச்சர் எடுத்துரைத்தார்.

தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகள் (BTO) திட்டத்தின் மூலம் பொது வீடமைப்பில் விற்பனைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் அதிகரித்திருப்பதாக அவர் சொன்னார். அதேநேரம், தேவையைத் தணிக்கும் நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றார் திரு லீ.

தேவை ஏற்படின் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் அரசாங்கத்துக்குத் தயக்கம் ஏதுமில்லை என்று கூறிய அமைச்சர், “ஏனெனில், தனியார் அல்லது வீவக வீட்டு விலை விரைந்து அதிகரிக்கும் நிலை ஏற்படாமலிருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யும்,” என்றார்.

வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை சென்ற ஆண்டு 9.6 விழுக்காடு அதிகரித்தது. முந்தைய ஆண்டு அது 4.9 விழுக்காடாகப் பதிவானது.

தனியார் வீடுகளின் விலை சென்ற ஆண்டு 3.9 விழுக்காடு அதிகரித்தது. முந்தைய ஆண்டு அது 6.8 விழுக்காடாக இருந்தது.

கடந்த சில ஆண்டுகளில் வீட்டு விலை உயர்வைக் குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம், வீவக வீடுகளுக்கான கடன் வரம்பு 80 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது.

2022 செப்டம்பரில், தனியார் வீட்டு உரிமையாளர்கள் மறுவிற்பனை வீடுகளை வாங்குவதற்கு 15 மாதக் காத்திருப்பு காலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஏப்ரலில், இரண்டாவது அல்லது அதற்கடுத்த வீடுகளை வாங்கும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் கூடுதல் முத்திரை வரி விகிதம் அதிகரிக்கப்பட்டது. மேலும், வீடு வாங்கும் வெளிநாட்டினருக்குக் கூடுதல் முத்திரை வரி 30 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

15 மாதக் காத்திருப்பு நேரம் என்ற விதியால், ஒரு மில்லியன் வெள்ளிக்குமேல் விலை கொடுத்து மறுவிற்பனை வீட்டை வாங்குவோரின் விகிதம் 2022ஆம் ஆண்டைவிட 2024ல் குறைந்ததை அமைச்சர் சுட்டினார்.

இத்தகைய தற்காலிக விதிகளை இப்போதைக்கு அரசாங்கம் நீக்காது என்று கூறிய அவர், சொத்துச் சந்தை நிலைபெற்றபின் அவை அகற்றப்படலாம் என்றார்.

தனியார் வீட்டு விலை வளர்ச்சி, சென்ற ஆண்டில் மெதுவடைந்ததாக அமைச்சர் கூறினார். இருப்பினும் கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பிருந்ததைவிட அது இன்னும் அதிகமாகவே இருப்பதாக அவர் சொன்னார்.

வீடு வாங்குவோர் தங்கள் நிதி சார்ந்த முடிவுகளில் கவனத்துடன் செயல்படவேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

வீட்டு உரிமையாளர் அதில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டிய காலகட்டத்தைப் பூர்த்தி செய்த வீடுகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு குறைவு என்பதால் குறைவான வீடுகளே விற்பனைக்கு வந்ததை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்