சீன சமூகத் தலைவர்களுடன் அரசாங்கம் இணைந்து பணியாற்றும்: பிரதமர் வோங்

2 mins read
44e4a1f3-f90c-445f-a5fe-74e480f34ea1
நவம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் (வலமிருந்து இரண்டாவது) கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புறச் சூழல்கள் மேலும் சிக்கலடைந்து, பொருளியல் சவால்கள் மேலும் வலுப்பெறும் நிலையில், முற்காலத்தில் பொருத்தமாக விளங்கிய கொள்கைகள் இனியும் பயன் தராமல் போகக்கூடும்.

அதனால் அரசாங்கம் இந்த யதார்த்தத்தைக் கையாளும் வகையில், புதிய சிந்தனைகள், அணுகுமுறைகள் ஆகியவை தொடர்பில் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

நவம்பர் 29ஆம் தேதி, அவரைச் சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் திரு வோங் உரையாற்றினார்.

சிங்கப்பூர்ச் சீனக் குலமரபுச் சங்கக் கூட்டமைப்பும் (SFCCA) சிங்கப்பூர்ச் சீன வர்த்தக, தொழில் சபையும் (SCCCI) அந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

அதில் மாண்டரின் மொழியில் உரையாற்றிய திரு வோங், “ஒருவரின் எல்லைகளை விரிவுபடுத்தி, குடும்பத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகக் கல்வியைப் பரிசளித்தல், சமூக நல்லிணக்கம் போன்ற அம்சங்களை ஊக்குவிப்பதன் மூலம் தன்னைவிடச் சமூக நலனை முன்னிறுத்துதல், வருங்காலத் தலைமுறையினரின் நலனுக்காகப் பணியாற்றுதல் போன்ற விழுமியங்கள் இதில் அடங்கும்,” என்று கூறினார்.

பொதுவான விழுமியங்களைப் பாதுகாத்து, ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வருங்காலத் தலைமுறையினருக்கு மேம்பட்ட இல்லமாகச் சிங்கப்பூரை உருவாக்குவதன் தொடர்பில் தாமும் தமது குழுவினரும் சீன சமுதாயத்துடன் இணைந்து பணியாற்றக் கடப்பாடு கொண்டிருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீன சமூகத் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். அவர்களில் பலர், திரு வோங்கின் 25 ஆண்டுகாலப் பொதுச்சேவைப் பணியில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள்.

சீன சமூகத் தலைவர்கள், சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் சிங்கப்பூர்ச் சீனக் கலாசாரத்தைக் கட்டிக்காக்கவும் உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் விரிவுகாணவும் உதவுவது மட்டுமன்றி, அரசாங்கத்துக்கும் சமூகத்துக்கும் இடையிலான நம்பிக்கையையும் மரியாதையையும் பேணி வளர்ப்பதாகவும் பிரதமர் பாராட்டினார்.

விருந்து நிகழ்ச்சியில், சிங்கப்பூர்ச் சீனக் குலமரபுச் சங்கக் கூட்டமைப்பு, சிங்கப்பூர்ச் சீன வர்த்தக, தொழில் சபை ஆகியவற்றின் மன்ற உறுப்பினர்கள், சீன சமூகத்தினர், குலமரபு, வர்த்தகச் சங்கப் பிரதிநிதிகள், உள்ளூர்ச் சீனத் தொழில்முனைவர்கள் என ஏறத்தாழ 800 பேர் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்