புதிய பட்டதாரிகளை வேலையமர்த்த தனியார் துறையை அரசாங்கங்கள் ஊக்குவிக்க வேண்டும்: அதிபர் தர்மன்

புதிய பட்டதாரிகளை வேலையமர்த்த தனியார் துறையை அரசாங்கங்கள் ஊக்குவிக்க வேண்டும்: அதிபர் தர்மன்

படம்: ராய்ட்டர்ஸ்

12 Oct 2026 - 8:07 pm

2 mins read

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தால் உலக அளவில் தொடக்க நிலை வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில், புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதை ஊக்குவிக்க அரசாங்கங்கள் தனியார் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

மேலும், உயர்கல்வி முறைகளும் தற்போதைய கல்விசார் முக்கியத்துவத்திலிருந்து வேலை சார்ந்த பயிற்சிகள், வேலை-கல்வித் திட்டங்கள், தொழிற்பயிற்சிகளுடன் கூடிய பயிற்றுமுறைக் கற்றலுக்கு மாற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேங்காக்கில் நடைபெற்ற அனைத்துலகப் பண நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டத்திற்கிடையே நடைபெற்ற ‘ஏஐயும் வேலைவாய்ப்புகளும்’ தொடர்பான குழுக் கலந்துரையாடலில் அதிபர் உரையாற்றினார்.

நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலக வங்கிக் குழுமத் தலைவர் அஜய் பங்கா ஆகியோருடன் திரு தர்மன் பங்கேற்ற அந்தக் கலந்துரையாடல், வளரும் நாடுகள் ‘சிறிய ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதில் கவனம் செலுத்தியது.

ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்ட அதிபர் தர்மன், இது ஒருமுறை மட்டும் ஏற்படும் அதிர்ச்சியன்று; மாறாக, இது முற்றிலும் ஒரு புதிய யுகம் என்றார்.

நல்ல வேலைவாய்ப்புகளுக்கு வளர்ச்சி முக்கியம் என்றாலும் அதுமட்டுமே போதாது என்று குறிப்பிட்ட அவர், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் வளர்ச்சி நன்றாக இருந்தாலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் பலவீனமாக உள்ளது என்பதைச் சுட்டினார்.

உலகம் செயலற்று இருந்தால், வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் இடையிலான இந்த இடைவெளியை ஏஐ மேலும் அதிகரிக்கும் என்று திரு தர்மன் எச்சரித்தார்.

ஏஐ மூலமாக நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஏஐ தொழில்நுட்பம் இருந்தாலும் மனிதர்கள் சிறப்பாகச் செய்யக்கூடிய வேலைகளை உருவாக்கவும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றார் அவர்.

புதிய பட்டதாரிகள் அனுபவம் பெறும் தொடக்க நிலை வேலைகள் மறைந்து வரும் விவகாரத்தில் உலக அரசாங்கங்கள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். இது தற்காலிக நடவடிக்கையாக இல்லாமல் கட்டமைப்பு ரீதியிலான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிபர் தர்மன் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்