அண்மையில் பிஸ்ஃபைல் (Bizfile) இணைய வாசலில் அடையாள அட்டை எண்கள் வெளியானதற்காக அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.
தேசிய செய்தியாளர் நிலையத்தில் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (ஏக்ரா) தலைமை நிர்வாகி சியா டென் ஆகிய மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து, அச்சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த அச்சந்திப்பின்போது அவர்கள் பலமுறை மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.
சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான குறைகளைச் சரிசெய்ய, மறைக்கப்பட்ட அடையாள அட்டை எண்களின் பயன்பாட்டை அரசாங்கம் படிப்படியாக இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் நீக்கத் தொடங்கியது என்றார் திருவாட்டி டியோ. இவ்வேளையில், ஏக்ராவின் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட ஒரு குறைபாடு, மேல்குறித்த சம்பவத்திற்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
“புதிய வர்த்தகச் செயல்முறைகளிலும் சேவைகளிலும் மறைக்கப்பட்ட அடையாள அட்டை எண்களின் பயன்பாட்டை நிறுத்துமாறு அரசு நிறுவனங்களுக்குத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது,” என்று திருவாட்டி சியா டென் தெரிவித்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலை, பயனர்களின் முழு அடையாள அட்டை எண்களை இலவசமாக வழங்க வேண்டும் என ஏக்ரா தவறாகப் புரிந்துகொண்டதாக அவர் சொன்னார்.
தனிநபர் ஒருவரின் அடையாளத்தைக் கண்டறிய அடையாள அட்டை எண்களை அதிகமாக நம்பியிருப்பது மக்களிடையே பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக திருவாட்டி டியோ கூறினார்.
அடையாள அட்டை எண்கள் ஒரே பெயரைக் கொண்டவர்களை வேறுபடுத்துவதற்கு உதவினாலும், அவை எளிதில் பரப்பப்படலாம் என்பதால் தனிநபர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அதே வேளையில், மறைக்கப்பட்ட அடையாள அட்டை எண்களின் பயன்பாட்டை நிறுத்துவது என்பது அந்த எண்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்குச் சமமாகாது என்றும் அமைச்சர் டியோ தெளிவுபடுத்தினார்.
மிகவும் தேவைப்பட்டால் ஒழிய, அடையாள அட்டை எண்களை வேறு எதற்கும் வெளியிடக்கூடாது என்றார் அவர்.
தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மறைச்சொல்லாக ஒருவரின் அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பதிவுசெய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்புடைய நபர்களை மட்டுமே கடந்த வாரம் நிகழ்ந்த சம்பவம் பாதித்தது என்றும் மற்றவர்கள் பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் இந்திராணி கூறினார்.
மேலும், பிஸ்லைஃப் இணைய வாசலில் கடந்த வாரம் மூடப்பட்ட அதன் ‘மக்கள் தேடல்’ அம்சம் திருத்தங்களுக்குப் பிறகு அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என்று அவர் சொன்னார்.
புதிய தேடல் அம்சம், எந்தவொரு நபரின் அடையாள அட்டை எண்ணையும் வெளிப்படுத்தாமல், முறையான வர்த்தகக் காரணங்களுக்குத் தேவையான தகவலை மட்டும் வெளிப்படுத்தும். முழு அடையாள அட்டை எண் உட்பட ஒருவரைப் பற்றிய கூடுதல் தகவலைப் பணம் செலுத்தி பிஸ்லைஃப் நிறுவனத்திடமிருந்து பெற முடியும்.
“பெருநிறுவன வெளிப்படைத்தன்மைக்கும் தனிப்பட்ட தகவல் தொடர்பான பொதுமக்களின் கவலைகளுக்கும் இடையே இதுவே சரியான சமநிலை என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குமாரி இந்திராணி கூறினார்.