சிங்கப்பூரில் புதிய எம்ஆர்டி நிலையங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவற்றின் அருகே அரசு ஊழியர்கள் அதிகமாக வீடுகளை வாங்கியதாக அமெரிக்காவின் தேசியப் பொருளியல் ஆராய்ச்சிப் பிரிவு (என்பிஇஆர்) வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையைத் தொடர்ந்து சிங்கப்பூர் அரசாங்கம் அதிகாரபூர்வ பதிலறிக்கையை வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) வெளியிடப்பட்ட பதிலறிக்கையில் மேற்கூறிய அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்ட புள்ளிவிவரங்கள் 2011ஆம் ஆண்டும் அதற்கு முன்பும் அறிவிக்கப்பட்ட எம்ஆர்டி நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் 2011க்குப் பிறகு அத்தகைய தொடர்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குறைகூறல்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் புள்ளிவிவரம் சார்ந்த தகவல்கள் கவலைக்குரியன என்றும் தெரிவித்த அறிக்கை, எனினும் அது மட்டுமே தனிப்பட்ட அதிகாரி ஒருவர் ரகசியத் தகவலைப் பயன்படுத்தினார் என்பதற்கான ஆதாரமாகாது; அந்தத் தகவல் சொத்து வாங்குவதில் தாக்கம் செலுத்தியதா என்பதையும் அது உறுதிப்படுத்திவிடாது எனவும் விவரித்தது.
எம்ஆர்டி திட்டங்கள் குறித்த கருத்துகள், அவை பற்றிய ஊகங்கள் பொதுவெளியில் ஏற்கனவே இருந்திருக்கலாம்; மேலும் புதிய கட்டுமானங்களை விற்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைப் பொதுச் சேவைப் பிரிவு தன் பதிலறிக்கையில் சுட்டிக்காட்டியது .
இதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் ரயில் குறித்த திட்டமிடலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகில் வீடு வாங்கினார்களா என்பதை அடையாளம் கண்டு ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தனித்தனியாக ஆய்வு செய்யவுள்ளதாகவும் இது பழைய விவகாரம் என்பதால் பதிவுகளை மீட்கக் கூடுதல் காலம் தேவை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் ரகசியத் தகவலைப் பயன்படுத்தி சொந்த நலனுக்காகச் செயல்படுவதைத் தடுக்க பொதுச் சேவையில் நீண்ட காலமாகவே விதிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உள்ளன.
அரசு அதிகாரிகள் தாங்கள் சொத்து வாங்குவதை அறிவிக்க வேண்டும். முக்கியத் தகவல்களை அணுகுவதில் கட்டுப்பாடுகளும், முறைகேடு குறித்த சந்தேகம் இருந்தால் புகாரளிக்க வழிமுறைகளும் உள்ளன. இந்த விதிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் காலப்போக்கில் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் அனைவரும் மிக உயர்ந்த ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அதிகாரி எவரேனும் ரகசியத் தகவலைச் சொந்த நலனுக்காகத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்க நியாயமான காரணங்கள் இருந்தால், அதுகுறித்து விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை திட்டவட்டமாகக் கூறியது.
அதேவேளையில், இத்தகைய தகவல்களைப் பயன்படுத்தி சொந்த நலனுக்காக வீடு வாங்கியதற்கான ஆதாரம் கிடைத்தால் அந்த வழக்கு விசாரணைக்காகக் காவல்துறைக்கு அனுப்பப்படும் என்றும் பிரதமர் அலுவலகத்தின்கீழ் இயங்கும் பொதுச் சேவைச் பிரிவு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 14ல் வெளியிடப்பட்ட அந்த ஆய்வுக்கட்டுரையில், ஆய்வாளர்கள் புதிய எம்ஆர்டி நிலையங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பும் பின்பும் மேற்கொள்ளப்பட்ட வீட்டு விற்பனைப் பரிவர்த்தனைகளை ஒப்பிட்டுப் பார்த்தனர். மேலும், அவர்களின் கூற்றுப்படி, அறிவிப்புக்கு முந்தைய பரிவர்த்தனையில் இடைநிலை அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டியிருந்ததாகத் தெரிவித்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
