கவ்டெக் சிங்கப்பூர் அமைப்பு 93 பேரை ஆட்குறைப்புச் செய்திருக்கிறது. மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது ஊழியரணியில் 7 முதல் 9 விழுக்காட்டு வேலைகள் பாதிக்கப்படும் என்று அது கருதுகிறது.
விற்பனையாளர்கள் செய்துகொடுக்கும் திட்டங்களை நிர்வகிக்கும் நிலையிலிருந்து அவற்றைச் சொந்தமாகக் கவனித்துக்கொள்ளும் நிலைக்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கவ்டெக்கைக் கொண்டுசெல்லும் என்று அதன் தலைவர் சிங் காய் ஃபோங் தெரிவித்தார்.
அமைப்பின் கிட்டத்தட்ட 3,900 ஊழியர்களுக்குப் புதன்கிழமை (ஜூலை 15) அனுப்பிய மின்னஞ்சலில் அவர் அதனைக் குறிப்பிட்டார். அந்த நடவடிக்கைகள், நாட்டின் தேவைகளுக்கு உடனடியாகச் செயல்படும் நிலைக்கு அமைப்பை இட்டுச்செல்லும் என்றார் அவர்.
சிங்கப்பூரர்கள் அனைவருக்குமான மின்னிலக்கச் சேவைகளை மேலும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வழங்குவதற்கு ஏதுவாகத் தனது செயல்பாட்டு முறையை ‘கவ்டெக்’ அமைப்பு மெருகேற்றுகிறது.
குறிப்பிட்ட ஒரு வேலையை ஒரு நிறுவனம் முடித்துக்கொடுக்கும் முறையிலிருந்து மாறப்போவதாக அமைப்பு தெரிவித்தது.
ஒரு சாதனம் தொடங்கப்பட்டதிலிருந்து அது மீட்டுக்கொள்ளப்படும்வரை தொடர்ந்து பொறுப்பேற்கும் முறைக்கு மாறுவதாக அமைப்பு கூறியது. அதாவது, பொதுச் சேவைகளை இயக்குகின்ற மின்னிலக்கச் சாதனங்களுக்கும் தளங்களுக்குமான முழுப் பொறுப்பையும் அமைப்பு ஏற்றுக்கொள்ளும். அதேநேரம், நிபுணத்துவச் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் அமைப்பு இணைந்து பணியாற்றுவதும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
‘கவ்டெக் சிங்கப்பூர்’ புதன்கிழமை (ஜூலை 15) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அரசாங்க மின்னிலக்கச் சேவைகளில் அதிகரித்துவரும் சிக்கல்களாலும் அவற்றின் அளவாலும் இந்த உத்திபூர்வ மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டது.
‘அறிவார்ந்த தேசம்’ எனும் தொலைநோக்கை எட்டுவதற்குரிய ஆற்றலை வலுப்படுத்த அது உதவும் என்று அறிக்கை குறிப்பிட்டது. தொழில்நுட்பத்தின் உதவியோடு பொதுமக்களுக்கு நல்ல சேவைகளை வழங்க அது கைகொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவின் காரணமாகவோ செலவைக் குறைக்கும் நோக்கத்துடனோ இந்த மாற்றம் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த உருமாற்றம் மேலும் நம்பகமான, பாதுகாப்பான, விரைவான மின்னிலக்கச் சேவைகளைக் குடிமக்களுக்கு வழங்க உதவியாக இருக்கும்.
கவ்டெக் அமைப்பில் மின்னிலக்கத் திறனாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், அது அமைப்புக்குத் தேவையான பொறுப்புகளிலும் ஆற்றல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.
தற்போது கூடுதலாக மென்பொருள் பொறியாளர்கள், சாதன நிர்வாகிகள், வடிவமைப்பாளர்கள், தரவு வல்லுநர்கள், இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள், கணினிக் கட்டமைப்புப் பொறியாளர்கள் முதலியோரை வேலைக்கு எடுப்பதாக கவ்டெக் சிங்கப்பூர் சொன்னது. அதேநேரம், அதிகமான சாதனங்கள் அமைப்புக்குள்ளேயே உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன; அதனால், பாரம்பரியத் திட்ட, விற்பனையாளர் நிர்வாகப் பணிகள் படிப்படியாகக் குறையும் என்றும் அது தெரிவித்தது.
உருமாற்றத்தில் அதிகாரிகளுக்கு ஆதரவு
தற்போதைய மாற்றத்தில் அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கவ்டெக் சிங்கப்பூர் கூறியது.
கணிசமான எண்ணிக்கையில் அதிகாரிகளைப் புதிய பணிகளுக்கு மாற்றிவிட்டுள்ளதாக அது தெரிவித்தது.
இயன்றவரை உள்ளுக்குள்ளேயே அதிகமான அதிகாரிகள் வேறு வேலைகளில் தொடர்ந்து அமர்த்தப்படுவர் என்று அமைப்பு சொன்னது.
பாதிக்கப்பட்ட திட்ட, விற்பனையாளர் நிர்வாகப் பணிகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு முழுச் சம்பளத்துடன்கூடிய வேலைப் பயிற்சித் திட்டங்களையும் சீரமைக்கப்பட்ட மறுபயிற்சித் திட்டங்களையும் வழங்குவதாக அது கூறியது.
இந்த உருமாற்றத்தில் அதிகாரிகள் அனைவரையும் ஈடுபடுத்த முடியாது என்றும் அமைப்பு தெரிவித்தது.
ஊழியர்களுக்குத் தனிப்பட்ட ஆதரவை வழங்க பொதுச் சேவைப் பிரிவு, சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு, ஆணைபெற்ற கழக ஊழியர்கள் இணைப்புச் சங்கம் ஆகியவற்றுடன் அணுக்கமாய்ப் பணியாற்றுவதாக கவ்டெக் சிங்கப்பூர் அமைப்பு கூறியது. பொதுச் சேவைக்குள் மறுவேலை வாய்ப்புகளை வழங்குவது, வேலை உருமாற்றத்திற்கு உதவுவது முதலியவை அதில் அடங்கும்.
மறுவேலை, மறுபயிற்சித் திட்டங்கள் ஆராயப்படும் நிலையில் , சிறிய எண்ணிக்கையில் அதிகாரிகள் கவ்டெக் அமைப்பைவிட்டு மாறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொழிற்சங்கத்துடன் இணைந்து அவர்களுக்கு விரிவான ஆதரவுத் தொகுப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது. நிதி, உருமாற்ற ஆதரவு, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதல், வேலை கிடைக்க உதவுவது முதலியவை அவற்றுள் சில.
“பாதிக்கப்பட்ட ஒவ்வோர் அதிகாரிக்கும் இந்த மாற்றத்தின்போது நாங்கள் கவனத்துடனும் மரியாதையுடனும் ஆதரவளிப்போம். அவர்கள் கவ்டெக்கில் தொடர்ந்தாலும் சரி, பொதுச் சேவையில் பிற பொறுப்புகளை ஏற்றாலும் சரி, அல்லது அதற்கு அப்பால் சென்றாலும் சரி. அவர்கள் ஒவ்வொருவரும் சிங்கப்பூரர்கள் அன்றாடம் பயன்படுத்தும் கட்டமைப்புகளையும் சேவைகளையும் உருவாக்க உதவியுள்ளனர். அதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என்றார் திரு சிங் காய் ஃபோங்.

