‘கவ்டெக்’ மறுசீரமைப்பு, பொதுச் சேவைத் துறையில் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான நடவடிக்கையின் ஒரு பகுதியன்று எனப் பொதுச் சேவைப் பிரிவு வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தெரிவித்துள்ளது.
கவ்டெக் மறுசீரமைப்பு நடவடிக்கையின் காரணமாக 93 ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாயினர்.
தொழில்நுட்பத் துறை கண்டுவரும் விரிவான மாற்றங்களுக்கு ஏற்ப, தனது சொந்த செயல்பாட்டுத் தேவைகளைச் சரிசெய்துகொள்வதை மறுசீரமைப்பு பிரதிபலிப்பதாகப் பொதுச் சேவைப் பிரிவு கூறியது. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை அது வெளியிட்டது.
தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வேகமான முன்னேற்றங்களும் மின்னிலக்கத் தயாரிப்புகளை உருவாக்குவதிலும் வழங்குவதிலும் மாறிவரும் வழிமுறைகளும் இதில் அடங்கும் என்று பொதுச் சேவைப் பிரிவு கூறியது.
கவ்டெக், அதன் மறுசீரமைப்புக் குறித்து புதன்கிழமை அறிவித்தது.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளில், கிட்டத்தட்ட 3,900 பேர் கொண்ட அதன் ஊழியரணியில் 7 முதல் 9 விழுக்காட்டு வேலைகள் பாதிக்கப்படும் என்று கவ்டெக் கருதுகிறது.
பொதுச் சேவைத் துறையில் தேவைப்படும்போது மட்டுமே குறிப்பிடத்தக்க அளவுக்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்தது.
ஓர் அமைப்பின் செயல்முறைச் சூழல், அதன் நோக்கம் அல்லது செயல்முறை மாதிரி ஆகியவற்றில் ஏற்படும் அடிப்படை மாற்றங்களைக் கையாளும் விதமாகவே இது இருக்கும் என்று பொதுச் சேவைப் பிரிவு குறிப்பிட்டது. பொதுச் சேவைத் துறையின் பணிகளை அந்தப் பிரிவே மேற்பார்வையிடுகிறது.
மாறிவரும் தேவைகளையும் முன்னுரிமைகளையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுச் சேவை அமைப்புகள், அவற்றின் நிறுவனங்கள், செயல்முறைகள், செயல்முறை மாதிரிகள், பணியாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்துவருகின்றன.
ஊழியரணியில் செய்யப்படும் மாற்றங்களில் பெரும்பாலானவை கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு சொன்னது. மறுதிறன் பயிற்சி, வேலை மறுவடிவமைப்பு, வேறு வேலைக்கு மாற்றம், இயல்பான ஓய்வு ஆகியவற்றின் மூலம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அது கூறியது.

