எல்லை தாண்டும் பயணங்களுக்கான டாக்சி முன்பதிவுகள் கிராப் செயலியில் தொடக்கம்

எல்லை தாண்டும் பயணங்களுக்கான டாக்சி முன்பதிவுகள் கிராப் செயலியில் தொடக்கம்

2 mins read
294a0b3d-a138-42b1-9214-c84db4cb6446
திங்கட்கிழமை (மே 4) காலை 10 மணி முதல் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சத்தின் மூலம், பயணிகள் ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்ரி, ஃபாரஸ்ட் சிட்டி, கூலாய் மற்றும் சினாய் ஆகிய இடங்களில் உள்ள எந்தவோர் இடத்துக்கும் குறைந்தது 12 மணிநேரத்திற்கு முன்பே பயணங்களை முன்பதிவு செய்யலாம். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

புகிஸ் வட்டாரத்தில் உள்ள பான் சான் ஸ்திரீட் முனையத்திலிருந்து நேரடியாக வாடகைக்கு எடுக்கப்படும் டாக்சிகளைவிட கட்டணம் அதிகமாக இருப்பதைப் போல தோன்றினாலும் சிங்கப்பூரில் உள்ள கிராப் பயனர்கள் இப்போது தீவின் எந்தப் பகுதியிலிருந்தும் ஜோகூருக்குச் செல்லும் எல்லை தாண்டும் பயணங்களுக்கான டாக்சிகளை அதன் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.

திங்கட்கிழமை (மே 4) காலை 10 மணி முதல் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், பயணிகள் ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்ரி, ஃபாரஸ்ட் சிட்டி, கூலாய் மற்றும் சினாய் ஆகிய இடங்களில் உள்ள எந்தவோர் இடத்துக்கும் குறைந்தது 12 மணிநேரத்திற்கு முன்பே பயணங்களை முன்பதிவு செய்யலாம்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், பிராடலிலிருந்து ஜோகூர் பாருவில் உள்ள கேஎஸ்எல் சிட்டி கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள உணவகத்துக்குச் செல்லும் நான்கு பேர் அமரக்கூடிய எல்லை தாண்டும் டாக்சியின் கட்டணம் $36ஆக இருந்தது. எனினும் இது தொழில்நுட்பக் கோளாறாகத் தோன்றியது.

புகிஸ் வட்டாரத்தில் உள்ள பான் சான் ஸ்திரீட் முனையத்திலிருந்து லார்கின் சென்ட்ரல் முனையத்திற்கோ அல்லது 35 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்ளான எந்தப் பகுதிக்கோ நேரடியாகச் செல்லும் நான்கு பேர் அமரக்கூடிய டாக்சிக்கு, வழக்கமான கட்டணம் $80 ஆகும்.

மே 4 அன்று காலை சற்று தாமதமாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மீண்டும் சரிபார்த்தபோது, கிராப்பில் உள்ள கட்டணங்கள் மிகவும் துல்லியமாகப் பிரதிபலித்தன. இருப்பினும், பயணம் திட்டமிடப்பட்ட நாளின் நேரத்தைப் பொறுத்து கட்டணங்களில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன.

செவ்வாய்க்கிழமை (மே 5) காலை 9 மணிக்குத் திட்டமிடப்பட்டால், பிராடலிலிருந்து கேஎஸ்எல் சிட்டி கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள அதே உணவகத்துக்குச் செல்வதற்கான கட்டணம் $111.20ஆக இருந்தது. அதுவே பிற்பகல் 2 மணிக்குத் திட்டமிடப்பட்டால், அதன் கட்டணம் $101.20ஆக இருந்தது.

இந்தக் கட்டணங்கள் 20 விழுக்காடு தள்ளுபடிக்குப் பிறகான தொகையாகும்.

நேரம், பயண தூரம் மற்றும் விடுமுறை நாள்களில் பயணம் அமைகிறதா என்பது உள்ளிட்ட பல காரணங்களைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும் என்று கிராப் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

கட்டணங்கள் உள்ளூர் நாணயத்திலேயே வசூலிக்கப்படும் என்றும் ரொக்கமில்லா கட்டணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கிராப்ஜோகூர்கட்டணம்டாக்சி