கிராப் டாக்சி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை ஏமாற்றிய மோசடிச் சம்பவத்தின் தொடர்பில் இரண்டாவது ஆடவருக்கு 10 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செய்யாத விநியோகச் சேவைகளுக்காக ஓட்டுநர்கள் சிலருக்கு அந்நிறுவனத்தைப் பணம் கொடுக்க வைத்ததற்காக 33 வயது லோ ஜிங் ஜீக்குச் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
லோ இரண்டு முறை ஏமாற்றியதை ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்தார்.
சென்ற ஆண்டு (2025) நவம்பர் 28ஆம் தேதி கிராப் நிறுவனத்தை ஏமாற்றிய நால்வரில் அவரும் ஒருவர். அதனால் அந்நிறுவனத்திற்கு $58,000 நட்டம் ஏற்பட்டதாகக் காவல்துறை அப்போது தெரிவித்திருந்தது. மொத்தம் 5,540 போலிப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாக நீதிமன்றத்திற்குத் தெரியவந்தது.
லோ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட தொகையின் மதிப்பு $3,900. அவர் அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
கடந்த மாதம், 35 வயது ஸுல்கர்னைன் முகம்மதுக்கு ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டிருந்த தொகையின் மதிப்பு $13,500க்கும் அதிகம்.
எஞ்சிய இருவரான 30 வயது அலெக்ஸ் வாங் ஸியாங் யி, 31 வயது லீ யோங் ஸு ஆகியோரின் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
நீதிமன்ற ஆவணங்களின்படி, மோசடிச் சம்பவங்களில் கிராப் ஓட்டுநர்கள் ஐவர் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஐந்தாம் நபர்மீது சென்ற ஆண்டு நவம்பர் மாதம் குற்றஞ்சாட்டப்படவில்லை. அவரின் பெயரும் வெளியிடப்படவில்லை.

