தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிராப், கோஜெக் இணைப்பு: ஒப்பந்தத்தை 2025ல் எட்டுவதற்கு இலக்கு

2 mins read
bc311f22-fb5c-4aca-87dc-6c638b24d942
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய வாடகை கார்ச் சேவை நிறுவனங்களான கிராப், கோடூ இரண்டும் பல்லாண்டுகளாக இணைப்பு குறித்த பேச்சுகளை அவ்வப்போது நடத்திவந்துள்ளன. - கோப்புப் படம்: சாவ்பாவ்

தனியார் வாடகை கார்ச் சேவை வழங்கும் சிங்கப்பூரின் கிராப் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் இந்தோனீசியாவின் கோடூ குழுமமும் (GoTo), கிராப் - கோஜெக் இணைப்பு குறித்த பேச்சுகளை விரைவுபடுத்தியுள்ளன.

அதன் தொடர்பில் இந்த ஆண்டு (2025) ஒப்பந்தத்தை எட்ட அவை இலக்கு கொண்டுள்ளன.

தென்கிழக்காசியாவின் போட்டித்தன்மை மிக்க இணையச் சந்தையில் பல்லாண்டுகளாகத் தொடரும் இழப்புகளை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் முயல்கின்றன.

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய வாடகை கார்ச் சேவை நிறுவனங்களான கிராப், கோடூ இரண்டும் பல்லாண்டுகளாக இணைப்பு குறித்த பேச்சுகளை அவ்வப்போது நடத்திவந்துள்ளன.

இந்த வட்டாரத்தின் 650 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்குச் சேவை வழங்குவதன் தொடர்பிலான செலவுகளையும் போட்டித்தன்மை நெருக்குதலையும் குறைக்க இந்த இணைப்பு உதவும் என்று அவை கருதுகின்றன.

கோடூ குழுமப் பேச்சாளர், இதுகுறித்த புளூம்பெர்க் செய்தி நிறுவனக் கேள்விகளுக்குக் கருத்துரைக்க மறுத்துவிட்டார். கிராப் நிறுவனப் பிரதிநிதிகளும் உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.

இருப்பினும் இரு நிறுவனங்களும் இணைப்பு தொடர்பில் இந்த ஆண்டு ஒப்பந்தம் செய்துகொள்ள இலக்கு கொண்டுள்ளதாக டீல்ஸ்திரீட்ஏஷியா எனும் நிதித் தகவல்களுக்கான இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், கடந்த ஆண்டுகளில் மூவிலக்கத்தில் பதிவான இவ்விரு நிறுவனங்களின் வளர்ச்சி விகிதங்கள் மிகவும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகரிக்கும் பணவீக்கம், வட்டி விகிதம் ஆகியவற்றைச் சமாளிக்க வாடிக்கையாளர்கள் செலவைக் குறைத்துக்கொள்வது இதற்குக் காரணம்.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் பொருளியல் சவால்களுக்கிடையே அவர்கள் வாடகை கார்ச் சேவையையோ வீட்டுக்கு உணவைக் கொண்டுவந்து தரும் விநியோகச் சேவையையோ நாடும் போக்கு குறைந்துள்ளதால் வாடகை கார்ச் சேவைக்கான தேவை மெதுவான வேகத்தில் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்