கைப்பேசிகளைக் கொண்டு தனியார் வாடகை வாகனங்களுக்கு முன்பதிவு செய்வதற்குச் சிரமப்படும் முதியோர்களுக்கு உதவிட நேரடி தொலைபேசி அழைப்புகள் உதவும் என்று அந்தப் புதிய சேவையை அறிமுகப்படுத்திய கிராப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘கிராப் ஏஐ கால் ஏ ரைட்’ (பிஇடிஏ) என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவினால் (ஏஐ) இயங்கும் அச்சேவை குறித்து ஊடகங்களுக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 5) வெளியிட்ட அறிக்கையில் கிராப் நிறுவனம் விளக்கம் அளித்தது.
இப்புதிய சேவை +65 3138 0000 என்ற எண்களில் ஏஐ குரல் உதவியுடன் செயல்படும். அதன்வழியாக வாடகை வாகனங்களுக்கு முன்பதிவு செய்யலாம்.
“திறன்பேசிகளில் இயங்கும் செயலிகளை முதியோர்களால் சிறந்த முறையில் பயன்படுத்த முடிவதில்லை. அவர்களுக்குத் தான் சிறந்த போக்குவரத்து தரவுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. எனவேதான் அத்தகையோருக்கு வாகன முன்பதிவுகளுக்கான செயல்முறைகளை எளிதாக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்று கிராப் நிறுவனத்தின் தலைமைச் சேவை அதிகாரி பிலிப் கன்டால் தெரிவித்தார்.
‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்நேரக் குரல் மாதிரிகளைக் கொண்டு சேவை தேவைப்படுவோரின் எண்ணங்களை மொழிபெயர்த்து, மாறுபட்ட தேவையை அறிந்து, வாக்கியங்களை உணர்ந்து முன்பதிவுகளைச் செய்யக்கூடிய வகையில் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நேரடி அழைப்புச் சேவை ஆங்கிலத்திலும் மாண்டரின் மொழியிலும் கிடைக்கும். விரைவில் வட்டார மொழிகளில் சேவை விரிவாக்கப்படும் என்று கிராப் நிறுவனம் கூறியது.


