தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியரின் நலனுக்காக ஆண்டுக்கு $4 மில்லியன் செலவிட கிராப் திட்டம்

2 mins read
10406780-de9f-480f-abf3-e1362466e643
ஊழியர்களின் சுகாதார நலன், தினசரி செலவுகள் போன்ற உடனடித் தேவைகளில் கவனம் செலுத்தப்படுகிறது என கிராப் நிறுவனத்தின் சிங்கப்பூருக்கான நிர்வாக இயக்குநர் யீ வீ டாங் கூறினார். - படம்: சாவ் பாவ்

தனியார் வாடகைக் கார் நிறுவனமான கிராப், சிங்கப்பூரில் தனது தளத்தைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள், உணவு விநியோக ஊழியர்கள் ஆகியோரின் நலனை மேம்படுத்த ஆண்டுக்கு $4 மில்லியன் செலவிடத் திட்டமிட்டிருப்பதாக வியாழக்கிழமை (அக்டோபர் 3) தெரிவித்தது.

அடுத்த ஆண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அது கூறியது.

மற்றொரு தனியார் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனமான கோஜெக், அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூரில் பணிபுரியும் அதன் ஓட்டுநர்களுக்கானச் சலுகைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இணையவழி ஊழியர்கள் என அறியப்படும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், தன்னுரிமை விநியோக ஊழியர்கள் ஆகியோரின் நல்வாழ்வுக்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இதுபோன்ற சலுகைகளை ஊழியர்களுக்கு அளிக்க இந்நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நடைமுறையில் இருக்கும் கிராப்நலன்கள் திட்டத்திற்கும் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்த அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படுத்தப்படும் புதிய சலுகைகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என கிராப் நிறுவனம் கூறியது.

இந்தப் புதிய சலுகைகளின் மூலம் ஆண்டுதோறும் சளிக்காய்ச்சலுக்கான இலவசத் தடுப்பு மருந்துகளை கிராப் ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பொது மருத்துவர், தொலைத்தொடர்பு மருத்துவர் ஆகியோரிடம் ஆலோசனைகள் பெற மானியமும் அவர்களுக்கு வழங்கப்படும்.

ஆண்டிற்கு இரண்டு வருகைகள் என ஒரு மருத்துவ வருகைக்கானச் செலவில் $45 வரை ஊழியர்களுக்காக கிராப் நிறுவனம் செலுத்தும்.

கிராப் நிறுவனத்தின் வெகுமதி அமைப்பின் முதல் இரண்டு நிலைகளில் இருக்கும் ஓட்டுநர்கள், விநியோக ஊழியர்கள் ஆகியோருக்கு இச்சலுகைகள் வழங்கப்படும்.

2018ஆம் ஆண்டு முதல் கிராப்நலன்கள் திட்டத்தின்கீழ், எரிபொருள் மானியம், நீண்டகால மருத்துவ விடுப்புக்கானக் காப்பீடு போன்ற சலுகைகளை கிராப் நிறுவனம் வழங்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்