புதன்கிழமை (ஜூலை 9) முதல் கிராப் டாக்சி சேவை வழங்கும் ஊழியர்கள் தானியங்கிப் பேருந்து சேவையைப் பயன்படுத்தலாம்.
ஒன் நார்த் ரயில் நிலையத்துக்கும் மீடியா சர்க்கிள் அலுவலகத்துக்கும் இடையிலான 3.9 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க இந்தப் பேருந்து சேவையை நாடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இருபத்து இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய அந்தப் பேருந்து தானியக்க முறையில் செயல்படும். எனினும், பாதுகாப்பு நடத்துநர் ஒருவர், நிலப் போக்குவரத்து ஆணைய விதிப்படி, பேருந்தில் இருப்பார். அவர் தேவைப்பட்டால் பேருந்தை இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு ஆறுமாத கால அறிமுகத் திட்டம். இந்தத் திட்டத்தின்படி, தானியங்கிப் பேருந்து சேவை உச்ச நேரங்கள் தவிர்த்து வார நாள்களில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களை ஏற்றிச் செல்லும் நேரம் தவிர்த்து இந்தப் பேருந்து பயிற்சி, தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேருந்து மின்சாரப் பேருந்து என்றும் இதில் உணர் கருவிகளுடன் கொரிய நாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆட்டோனமஸ் ஏ2இசெட்’ வடிவமைத்துள்ள வாகன தானியக்க திறன்கொண்ட மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரேடார் கருவிகள், கேமராக்கள் போன்றவற்றுடன் உணர் கருவிகளும் இதில் பொருத்தப்பட்டிருக்கும். இது சேவைக்கு விடப்படும் முன் 100 மணிநேரத்துக்கும் மேலாக கிராப் அலுவலகத்துக்கும் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையே சோதனைப் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் சாலைக் கட்டமைப்பு, சாலைக் குறிப்புகள் ஆகியவற்றுடன் பாதசாரிகளை அடையாளம் காணும் முறை யாவும் சோதனைப் பயணத்தில் அடக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் பேருந்து சாலை விளக்கு சமிக்ஞைகளுக்கு ஏற்ப நிற்பது, ஓட்டும் முறையில் தேவையான மாற்றங்களைச் செய்வது போன்றவற்றை கடைப்பிடிக்கும் திறனைப் பேருந்து பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது
இதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மேற்கொள்ளப்பட்ட 15 நிமிட சோதனை ஓட்டத்தில் பேருந்து சுயமாக சாலையில் தடம் மாறுதல், சாலையில் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது மோதாமல் தாண்டிச் செல்லுதல் போன்ற அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.