சிங்கப்பூரில் பல இடங்களைக் கண்டுகளிக்க சுற்றுப்பயணிகளுக்கு கிராப் பற்றுச்சீட்டு

சிங்கப்பூரில் பல இடங்களைக் கண்டுகளிக்க சுற்றுப்பயணிகளுக்கு கிராப் பற்றுச்சீட்டு

2 mins read
4d814fb9-100a-4e42-a7f6-ca94f181ba3e
காத்தோங், ஜூ சியாட் பகுதியில் அமைந்துள்ள பெரானக்கான் பாரம்பரியக் கடைவீடுகள், சிங்கப்பூரின் கடந்த காலத்தைப் பறைசாற்றுகின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூருக்கு வருகை தரும் சுற்றுப்பயணிகளைக் கவரும் வகையில், புதிய இரண்டு கிராப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன. கிராப் செயலியில் ‘சிங்கப்பூர் கிராப் டிராவல் பாஸ்’ அம்சத்துக்குப் பதிவு செய்யும்போது அவர்கள் பயணச் சலுகைகளைப் பெறலாம்.

சிங்கப்பூரின் பல்வேறு வட்டாரங்களையும் சுற்றுப்பயணிகள் கண்டுகளிக்க ஊக்குவிக்கும் வகையில், சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகமும் கிராப் நிறுவனமும் இணைந்து இந்த மூன்று மாதத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. முதல் பற்றுச்சீட்டு காத்தோங்-ஜூ சியாட், தியோங் பாரூ, மண்டாய், செந்தோசா ஆகிய இடங்களுக்குச் செல்லும் பயணக் கட்டணத்தில் 20 விழுக்காட்டுக் கழிவை வழங்கும். ஒரு பயனீட்டாளர் இச்சலுகையை இரண்டு முறை பயன்படுத்தலாம். இரண்டாவது பற்றுச்சீட்டு, இரவு நேரப் பொழுதைக் கழிப்போருக்கானது. ஹாலந்து வில்லேஜ், கிளார்க் கீ, போட் கீ, ராபர்ட்சன் கீ ஆகிய இரவு நேரக் கேளிக்கை இடங்களுக்கு இரவு 7 மணி முதல் அதிகாலை 4 மணி வரை செல்லும் கிராப் பயணங்களுக்கு 20 விழுக்காட்டுக் கழிவு ஒருமுறை வழங்கப்படும். செப்டம்பர் 11 முதல் 20 வரை நடைபெறும் சிங்கப்பூர் ரிவர் ஃபெஸ்டிவல், அக்டோபர் 2 முதல் 11 வரை நடைபெறும் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பருவம் இவற்றுடன் இணைந்து கிராப் பயணச் சலுகைத் திட்டம் இடம்பெறுகிறது. தென்கிழக்காசிய நாடுகளில் மின்னிலக்க விளம்பரங்கள் மூலம் இந்தச் சலுகைத் திட்டம் விளம்பரப்படுத்தப்படும். இளம் பயணிகளைக் கவரும் நோக்கில் ‘வி டோன்ட் வெயிட் ஃபார் ஃபன்’ இயக்கத்தின் தொடர்ச்சியாக இத்திட்டம் அமைகிறது. சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டில் 17 மில்லியன் முதல் 18 மில்லியனை எட்டும் என்றும் சுற்றுலாச் செலவினம் $31 பில்லியன் முதல் $32.5 பில்லியன் வரை பதிவாகும் என்றும் பயணத்துறைக் கழகம் கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்