கிராப் நிறுவனம் பதின்ம வயது பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடுதல் அம்சங்களை அதன் செயலியில் அறிமுகம் செய்யவிருக்கிறது.
13லிருந்து 17 வயதுக்குட்பட்டோர் கிராப் கார்களில் யாருடைய துணையும் இன்றி பாதுகாப்பாகப் பயணம் செய்ய அது உதவும்.
பதின்ம வயது பிள்ளைகளின் பெயர், பிறந்தநாள் போன்ற விவரங்களை உறுதிசெய்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கிராப் செயலியில் உள்ள குடும்பக் கணக்கில் சேர்த்துவிடலாம்.
அதன் மூலம் பிள்ளைகள் தன்னிச்சையாக கிராப் கார்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். அவர்கள் கிராப் கார்களில் ஏறியதிலிருந்து உரிய இடத்தைச் சென்றடையும் வரை பெற்றோர் முழு பயணத்தையும் கண்காணிக்க முடியும்.
எந்தப் புகாரும் இல்லாத தரமான ஓட்டுநர்கள் பதின்ம வயது பிள்ளைகளை ஏற்றிச்செல்ல அனுப்பப்படுவார்கள் என்று கிராப் நிறுவனம் குறிப்பிட்டது.
கிராப்எக்ஸ் (Grab X) என்ற நிகழ்ச்சியில் நிறுவனம் செயலியில் சேர்க்கவிருக்கும் புதிய அம்சங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) அறிவித்தது.
பதின்ம வயதினருக்கான அம்சத்தை தென் கிழக்காசியாவில் மே மாதத்திலிருந்து அறிமுகப்படுத்த கிராப் நிறுவனம் திட்டமிடுகிறது. சிங்கப்பூரில் ஒப்புதல் கிடைத்துவிட்டால் இவ்வாண்டு நடுப்பகுதிக்குள் புதிய அம்சம் அமல்படுத்தப்படலாம்.
இவ்வாண்டின் இறுதிக்குள் கார்களில் நடக்கக்கூடிய வாக்குவாதங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் கிராப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு அம்சம் பதற்றத்தைக் குறிக்கக்கூடிய பெரிய சத்தகங்கள் உட்பட வாக்குவாதங்கள், தகாத வார்த்தைகள் போன்றவற்றையும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.
கிராப் செயலி மூலம் தனக்காக மட்டும் உணவு வாங்குவோரின் பதிவுகள் ஒன்றுசேர்க்கப்படும். அதன் மூலம் ஒரே வட்டாரத்தில் வசிப்போருக்கான விநியோகக் கட்டணங்கள் குறையும்.