மருத்துவப் படிப்பை மேற்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் மேலும் ஒன்பது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேரலாம். இது சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு மருத்துவப் பள்ளிகளின் எண்ணிக்கையை 112 ஆகக் அதிகரிக்கும்.
மக்கள்தொகையின் வயதுக்கு ஏற்ப அதிகரித்து வரும் மருத்துவர்களுக்கான தேவையை சிங்கப்பூர் சிறப்பாகப் பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை உதவும் என்று சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் மருத்துவ மன்றமும் நவம்பர் 11ஆம் தேதி ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சிங்கப்பூர் மருத்துவப் பள்ளிகளில் 2013ல் 400லிருந்து, 2023ல் 500க்கும் அதிகமான மாணவர்களை சேர்க்கும் முடிவையும் இது நிறைவு செய்கிறது.
2025ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் இடம்பெறும் கூடுதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகாசல் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி மற்றும் பொதுச் சுகாதாரப் பள்ளியும் அடங்கும். இந்த முறை ஆஸ்திரேலியாவிலிருந்து பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு பல்கலைக்கழகம் அது.
இதனையும், மொத்தம் ஒன்பது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்கள் சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்படும்.
லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி உட்பட ஐந்து பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சேர்க்கப்படும். அதாவது மொத்தம் 24 பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்கள் சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட மற்ற மூன்று பல்கலைக்கழகங்களும் அயர்லாந்தைச் சேர்ந்தவை.
ஒன்பது மருத்துவப் பள்ளிகளைச் சேர்க்கும் நடைமுறை ஜனவரி 1, 2025 அன்று தொடங்கும். மேலும் இது சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் வழக்கமான மதிப்பாய்வின் ஒரு பகுதியாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

