சிங்கப்பூரின் முதல் கலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதல் தொகுதி மாணவர்களின் பட்டமளிப்பு விழா இம்மாதம் 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
லாசால் கலைக் கல்லூரியும் நன்யாங் நுண்கலைக் கழகமும் இணைந்து சிங்கப்பூர்க் கலைப் பல்கலைக்கழகத்தை ஈராண்டுக்குமுன் அதிகாரபூர்வமாகத் தொடங்கின.
அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் அந்தத் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 135 மாணவர்கள் தங்கள் பட்டங்களை இம்மாதம் பெறவிருக்கின்றனர்.
அவர்களில் 102 பேர் லாசால் கலைக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். 33 பேர் நன்யாங் நுண்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். கலைத் துறை தொடர்பான பட்டயக் கல்வியை முடித்த அவர்கள், பல்கலைக்கழகத்தில் தங்கள் பட்டப்படிப்பை ஈராண்டுக்கு மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 52 முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
2024ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர்க் கலைப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 760 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்த ஐந்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய ஆயிரத்துக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 29 பாடத்திட்டங்களுடன் கலைப் பல்கலைக்கழகம் தொடங்கியது. அவற்றுள் எட்டு, புதிய பாடத்திட்டங்கள்.
இயற்கையை உட்புறங்களில் கொண்டுவரும் பயோஃபிலிக் வடிவமைப்பு, சமுதாய எதிர்காலத்துக்கான வடிவமைப்பு ஆகியவை அவற்றுள் அடங்கும்.
இத்தகைய பாடத்திட்டங்கள் வளர்ந்துவரும் துறைகளையும் நீடித்த நிலைத்தன்மை, சுகாதாரம் ஆகியவற்றில் உள்ள சமூக ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுவதாகச் சிங்கப்பூர்க் கலைப் பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் சொன்னார்.
பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையும் அவர் சுட்டினார். உதாரணமாக, இசை சிகிச்சைத் துறையில் சேர அளவுக்கு அதிகமானோர் விண்ணப்பம் செய்ததை அவர் குறிப்பிட்டார்.

