ஊழல் வழக்கு: பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகத் தலைவருக்குச் சிறை

ஊழல் வழக்கு: பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகத் தலைவருக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Jun 2026 - 5:33 pm

1 mins read

ஊழல் குற்றச்சாட்டின் தொடர்பில், இரண்டு பள்ளிவாசல்களின் முன்னாள் நிர்வாகத் தலைவருக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 26) 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் நடந்த காலகட்டத்தில், அப்துல் ரஹீம் மாவாசி, ஜாலான் யூனோசில் உள்ள தாருல் அமான் பள்ளிவாசல், மெக்பெர்சனில் உள்ள சலீம் மாத்தார் பள்ளிவாசல் ஆகியவற்றின் நிர்வாகத் தலைவராக இருந்தார்.

அவர் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) மூத்த அதிகாரியாகவும் இருந்தார். அங்கிருந்து அவர் பள்ளிவாசல்களுக்கு இடைக்காலப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 59 வயது அப்துல் ரஹீம் தனது நண்பருக்கு விலை தொடர்பான ஆலோசனைகளை ஊழல் நோக்குடன் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் மூலம், அந்தப் பள்ளிவாசல்கள் தொடர்பான $223,000 மதிப்புள்ள கட்டுமான ஒப்பந்தங்கள் அந்த நண்பரின் நிறுவனத்திற்கு நேர்மையற்ற முறையில் கிடைப்பதற்கு அவர் வகைசெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, பள்ளிவாசல்களில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத அப்துல் ரஹீம், வழக்கு விசாரணைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

அப்போது 66 வயதாக இருந்த அவரது நண்பர் காம் ஹாக் பெங் என்றும் அழைக்கப்படும் முகம்மது முஸ்தகிம் காமிற்கு, 2025 பிப்ரவரியில் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்