சிங்கப்பூரின் மாபெரும் களிமண் கலைக் கொண்டாட்டமான சிங்கப்பூர் களிமண் விழா, இந்த ஆண்டு தனது ஐந்தாவது பதிப்புடன் மீண்டும் களைகட்டுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கலைவிழா, ஆற்றல்மிக்க மண்பாண்டக் கலைஞர்கள், தொழில்முனைவர்கள், பொழுதுபோக்காக களிமண் கலையில் ஈடுபடுபவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு புதுமையான கலை வெளிப்பாடுகளை ஊக்குவிக்கும் தளமாக விளங்குகிறது.
சிங்கப்பூர் சீனக் கலாசார நிலையத்தில் இவ்விழாவை வியாழக்கிழமை (நவம்பர் 6) அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்த அதிபர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் வளர்ந்துவரும் கலாசாரத்தின் வலுவான வெளிப்பாடாக இந்த விழாவை எடுத்துக்காட்டினார். அதிபருடன் அவரின் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
“களிமண் கலை என்பது பல கலாசாரங்களிலிருந்து தாக்கத்தையும் ஊக்கத்தையும் பெற்றுக்கொண்டு புதிய ஒன்றை உருவாக்கும் நமது கலாசாரத்தின் உயிருள்ள வெளிப்பாடாகத் திகழ்கிறது. இது வெறும் நகலெடுப்பதன்று,” என்று அவர் கூறினார்.
மண்பாண்டக் கலையின் திறந்த, கணிக்கமுடியாத தன்மை நம் கலாசார வளர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“மண்பாண்டக் கலையின் குறைபாடுகளில்தான் அதன் உண்மையான அழகு இருக்கிறது. இது முழுமையைத் தேடுவதன்று. நமது கலாசாரத்தைப் போலவே, இதற்கு ஓர் இறுதியான இலக்கு இல்லாமல் தொடர்ந்து மாறி வளர்ந்துகொண்டே இருக்கிறது,” என்றார் திரு தர்மன்.
இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளின் படைப்புகள் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டிய அதிபர் தர்மன், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையையும் எடுத்துரைத்தார்.
“மண்பாண்டக் கலை, பொழுதுபோக்கிற்காகச் செய்பவர்கள் முதல் தேர்ச்சி பெற்றவர்கள்வரை அனைவராலும் அனுபவித்து பங்கேற்கக்கூடிய ஒரு கலை. இவ்விழாவைத் தொடர்ந்து நடத்தி, சமூகத்தின் அற்புதமான வெளிப்பாட்டைச் சாத்தியமாக்கிய அனைத்துச் சங்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, சிங்கப்பூரின் புகழ்பெற்ற மண்பாண்டக் கலைஞர் டாக்டர் இஸ்கந்தர் ஜலீலின் தனிப்பட்ட காப்பகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 அரிய படைப்புகள் கொண்ட ‘ஒரு மண்பாண்டக் கலைஞரின் சேகரிப்பு’ என்ற சிறப்புக் கண்காட்சி இடம்பெறுகிறது. இவற்றில் சில படைப்புகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை.
மேலும், 10 வட்டாரக் கலைஞர்களும் விழாவின் மூன்று நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்களும் உருவாக்கிய புதுமையான படைப்புகளை வெளிப்படுத்தும் ‘களிமண்ணுக்கு வடிவம் கொடுத்தல்’ என்ற சிறப்புக் கண்காட்சியையும் வருகையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
கண்காட்சிகளுக்கு அப்பால், களிமண் தயாரிப்பாளர்களின் சந்தையில் ஸ்டூடியோக்கள், சமூக நிறுவனங்கள், தனிப்பட்ட கலைஞர்கள் ஆகியோரின் 100க்கும் மேற்பட்ட கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே பல்வேறு வண்ணமையமான கைவினைப் படைப்புகளை நேரடியாகக் காணவும் வாங்கவும் முடியும்.
இந்த ஆண்டின் மற்றொரு சிறப்பு அம்சமாக, ‘ஓசிபிசி நற்பணிகள்’ பிரிவு கலைவிழாவில் இடம்பெறுகிறது. இதன்மூலம் திரட்டப்படும் நிதி, ‘கேர் கார்னர் சிங்கப்பூர்’ அமைப்பின் ‘வாழ்க்கையை உயர்த்தும்’ முயற்சிக்கு வழங்கப்படும்.
சிங்கப்பூர் களிமண் விழா நவம்பர் 7 முதல் நவம்பர் 9 வரை சிங்கப்பூர் சீனக் கலாசார நிலையத்தில் நடைபெறும். நுழைவுச்சீட்டுகளை scf2025-tickets.eventbrite.sg என்ற இணையத்தளத்தில் பெறலாம்.

