சிங்கப்பூரை அலங்கரிக்க பிரமாண்டமான டுரியன்களும் உயரமான செண்டோல் கோப்பைகளும் பெரிய நூடல்களும் வருகின்றன. இவை அனைத்தும் டிசம்பர் முதல் தீவின் அக்கம்பக்கங்களில் காட்சிப்படுத்தப்படும்.
சமூகம் சார்ந்த கலைகளை மக்களிடையே கொண்டுசேர்ப்பதற்கான முதல் முயற்சி இது. ஒவ்வொரு கலைப் படைப்பும் அது அமைக்கப்பட்டிருக்கும் வட்டாரத்தின் தனித்துவமான தன்மையையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.
உணவுப் பொருள்களைப் பிரம்மாண்ட உருவத்தில் அக்கம்பக்கங்களில் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இப்புதிய திட்டம் முதலில் ஏழு பகுதிகளில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏழு புதிய அக்கம்பக்கங்கள் ஒரு மாதத்திற்குள் இத்திட்டத்தில் இணையும். மொத்தம் 14 அக்கம்பக்கங்களில் அமைக்கப்படும் பிரம்மாண்ட கலைப்படைப்புகள் 19 ஒவியக் கலைஞர்களையும் கிட்டத்தட்ட 1,400 குடியிருப்பாளர்களையும் உள்ளடக்கியது.
குடியிருப்பாளர்கள் அந்தந்தப் பகுதிக்கான சமூகக் கலை, கலாசார மன்றங்களால் வழிநடத்தப்படுகின்றனர்.
இதில், தங்கள் சமூகத்தில் கலை, கலாசாரத் திட்டங்களைச் செயல்படுத்தும் தொண்டூழியர்களும் உள்ளனர்.
சமூக மன்றங்களின் நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்பவர்களைத் தவிர்த்து, மற்ற பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவும் வாய்மொழிச் செய்தி மூலமாகவும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இத்திட்டத்தில் அமைக்கப்படும் சில கலைப்படைப்புகள் அடுத்த ஆண்டு சிங்கே 2025ல் நடக்கும் ஃபேஷன் ஆர்ட்ஸ் ஸ்திரீட்’ எனும் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரி 7, 8 ஆகிய தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
“இந்த பிரம்மாண்ட கலைப்படைப்புகள் குடியிருப்பாளர்களைத் தங்கள் சமூகம், உள்ளூர் பாரம்பரியம் ஆகியவற்றின்மீது உரிமை கொண்டாடவும் பெருமைகொள்ளவும் ஊக்குவிக்கின்றன. இது நமது தேசத்தின் துடிப்பை உயிர்ப்புடன் வைக்க உதவுகிறது,” என்று மக்கள் கழகத்தின் பங்காளித்துவம், கலை, கலாசாரப் பிரிவின் துணை இயக்குநர் திருவாட்டி எஸ்தர் குவெக் கூறினார்.
மேலும், “உணவு என்பது மக்களை ஒன்றிணைக்கும் ஒன்று. இந்த பெரிய அளவிலான உணவு சார்ந்த கலைப் படைப்புகள் குடியிருப்பாளர்களைத் தங்களுக்குப் பிடித்தமான உணவுடன் அவர்களுக்கு இருக்கும் அன்பை வெளிக்காட்ட உதவும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.