தேசியக் கொடியின் பிரம்மாண்டப் பயணம்

தேசியக் கொடியின் பிரம்மாண்டப் பயணம்

2 mins read
4d486cac-92a2-4a19-9d05-015f01bcb1bb
தேசியக் கொடிக்கு அருகில் நிற்கும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையினர். - படம்: கிறிஸ்டோ லியோன்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரின் 61வது தேசிய தின அணிவகுப்பு இவ்வாண்டு காலாங்கில் உள்ள சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

தேசிய விளையாட்டரங்கில் தேசிய தின அணிவகுப்பு கடைசியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்றது.

இவ்வாண்டின் அணிவகுப்பில் சில மாற்றங்கள் உண்டு. பாதுகாப்பு, செயல்பாட்டுக் காரணங்களால் இம்முறை, ‘ரெட் லயன்ஸ்’ சாகசக் குழுவின் வான்குடை அங்கமும் ஒருங்கிணைந்த வாகன அணிவகுப்பும் இடம்பெறமாட்டா. தேசியக் கொடி பறந்துவரும் அங்கத்திலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

1970ஆம் ஆண்டில் முதன்முதலாக தேசியக் கொடி பறந்துவரும் அங்கம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, கொடியின் அளவு வெறும் 3 x 2 மீட்டராக மட்டுமே இருந்தது. 1987ல் அளவுகள் மாற்றி அமைக்கப்பட்டு இன்று அது 30 x 20 மீட்டராக வியப்பூட்டும் அளவில் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.

தேசிய கீதம் ஒலிக்கும் அதே தருணத்தில், அரங்கில் இருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் தெளிவாகக் காணும் வகையில் தேசியக் கொடி இரவு 6.55 மணி அளவில் பறக்கவிடப்படவுள்ளது.

300 கிலோகிராமுக்கும் மேல் எடைகொண்ட அந்தப் பிரம்மாண்டக் கொடியை, 2026ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, ஏறக்குறைய 90 பேர் அர்ப்பணிப்புடன் தயார் செய்து வருகின்றனர். முழுநேர தேசிய சேவையாளர்கள் (NSFs), போர்க்காலப் படைவீரர்கள் (NSmen), சிங்கப்பூர் ஆயுதப்படைத் தொண்டூழியப் படைப்பிரிவினர் (SAF Volunteer Corps) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

கொடியைச் சரிபார்ப்பது, தயார்படுத்துவது, பறக்கவிடுவது உள்ளிட்ட பொறுப்புகளை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

“தேசிய தின அணிவகுப்பு என்பது ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வு. அந்த நிகழ்வில் இந்த ஒரு சில நிமிடக் கொடி அங்கத்திற்குப் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதை நான் இதற்கு முன்பு உணர்ந்ததே இல்லை,” என்றார் 28 வயது விமானப் பொறியாளர் ME2 பிரேம்ராஜ் ராய்ஸ்டன். 

அவர் கடந்த 7 ஆண்டுகளாக சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையில் பணியாற்றி வருகிறார். விமானப் பொறியாளராக, விமானங்களின் செயல்பாட்டை உறுதிசெய்வதோடு, பறக்கும்போது ஏற்படக்கூடிய அவசரகாலச் சூழல்களைக் கையாள்வதும் அவரது அன்றாடப் பணிகளாகும். 

இவ்வாண்டு முதன்முறையாக அவர் தேசிய தின அணிவகுப்பின் ஏற்பாடுகளில் ஈடுபடுகிறார்.

“நாம் செய்த பயிற்சியுடன் ஒப்பிடும்போது வானில் கொடி பறக்கும் நேரம் மிகக் குறைவாக  இருந்தாலும், அது ஒவ்வொரு சிங்கப்பூரரின் இதயத்தையும் தொடும் ஒரு நிகழ்வாக இருக்கும்,” என்றார் பிரேம்.

இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் சில மாற்றங்கள் இருந்தாலும், எப்போதும்போல அது பிரம்மாண்டமாக அமைய, ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்