துறைமுகப் படகுகளை மின்படகுகளாக மாற்ற $250,000 வரையிலான மானியம்

துறைமுகப் படகுகளை மின்படகுகளாக மாற்ற $250,000 வரையிலான மானியம்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Oct 2026 - 4:24 pm

2 mins read

சிங்கப்பூர்த் துறைமுகங்களில் இயங்கும் டீசல் படகுகளைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் படகுகளாக மாற்ற ஊக்குவிக்கும் வகையில், படகு உரிமையாளர்களுக்கு $250,000 வரையிலான மானியம் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் புதன்கிழமை (அக்டோபர் 14) அறிவித்துள்ளது.

ஈராண்டுகளுக்கு அமலில் இருக்கும் இந்தச் சிறப்புத் திட்டம், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத படகுகளுக்கான தேவையை அதிகரிப்பதுடன் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தித் திறனை விரிவாக்கவும் நம்பிக்கையளிக்கும்.

படகின் மின்கலன் திறனுக்கு ஏற்ப, ஒரு கிலோவாட்-மணி நேரத்திற்கு $250 வீதம் மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படும். 12 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகளுக்கு $150,000 வரையிலும் பெரிய படகுகளுக்கு அதிகபட்சமாக $250,000 வரையிலும் மானியம் கிடைக்கும்.

இந்தத் திட்டம் 2027 ஜனவரி 1ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கினாலும், 2026 அக்டோபர் 14 முதல் 2028 டிசம்பர் 31ஆம் தேதி வரை உரிமம் பெறும், முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் படகுகளுக்கும் இது பொருந்தும்.

சிங்கப்பூரின் துறைமுகங்களில் உள்ள 1,600க்கும் மேற்பட்ட டீசல் படகுகளை 2050ஆம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்துக்கும் கரிம நீக்கத்துக்கும் இடையிலான சமநிலையைப் பேணும் நிலைக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டு முதல் புதிய படகுகள் அனைத்தும் மின்சாரத்திலோ ஹைட்ரஜன் அல்லது பி100 உயிரி எரிபொருளைப் பயன்படுத்தியோ இயங்குவது கட்டாயமாக்கப்படும். படகுகள் 20 ஆண்டுகளுக்குமேல் பயன்பாட்டில் இருப்பதால் இந்த மாற்றம் விரைவில் தொடங்கப்பட வேண்டும்.

ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக கப்பல் எரிபொருள் மாநாட்டில் உரையாற்றிய போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, தொடக்ககாலக் கொள்முதல் அமைந்தால் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும் என்றார். சிங்கப்பூர் ஒரே எரிபொருளை மட்டும் நம்பியிருக்காமல் பல மாற்று வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அம்மோனியா எரிபொருள் பயன்பாட்டிற்கான புதிய சிங்கப்பூர் தரநிலைகளை ஆணையமும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இதற்கான சோதனைகள் நடத்தப்படும். பிரான்சின் சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்துடன் இணைந்து திரவ உயிரி-மீத்தேனைப் பயன்படுத்துவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மிதக்கும் இயற்கை எரிவாயுச் சேமிப்புப் பிரிவுகளுக்கான உரிமங்களுக்கு 2026 இறுதியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
துறைமுகம்படகுமின்சாரம்மானியம்கடல்துறைஆணையம்