குடும்பங்களுக்கு எந்த அளவுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து அவற்றின் மானியப் பிரிவை உறுதி செய்ய பயன்படுத்தப்படும் தளத்தின் செயலாக்கப் பிரச்சினை காரணமாக ஏறத்தாழ 20,000 பேருக்கான மானியங்கள் தவறாகக் கணக்கிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அக்கட்டமைப்பு சுகாதார அமைச்சால் நிர்வகிக்கப்படுகிறது.
பிழையைத் திருத்தி நிலைமையைச் சரிசெய்யும் பணிகள் நடந்துகொண்டிருப்பதாக திங்கட்கிழமை (ஜூலை 21) சுகாதார அமைச்சு கூறியது.
பாதிக்கப்பட்டோரின் மானியப் பிரிவுகளைக் கண்டறிய மறுமதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அமைச்சு தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோருக்குக் கிடைக்க வேண்டிய மானியத்தைவிட கூடுதல் மானியங்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வழங்கப்பட்டுவிட்ட கூடுதல் மானியத் தொகையை அவர்கள் திருப்பிக் கொடுக்க தேவையில்லை என்று அமைச்சு கூறியது.
கிடைக்க வேண்டிய மானியத்தைவிட குறைவான தொகையைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் எஞ்சிய தொகையைத் தந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
எஞ்சிய தொகை இவ்வாண்டு நவம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்டோரின் மானியப் பிரிவுகள் திங்கட்கிழமையிலிருந்து (ஜூலை 21) மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சு கூறியது.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் வழங்கும் தகவலைக் கொண்டு குடும்பங்களின் மானியப் பிரிவு நிர்ணயிக்கப்படுகிறது.
தவறான கணக்கிடுதலுக்குக் காரணமான செலயாக்கப் பிரச்சினை குறித்து அமைச்சு விளக்கம் அளித்தது. தரவுச் செயலாக்கத்துக்கான கால அளவு மாற்றி அமைக்கப்பட்ட பிறகு சிலரது வர்த்தக வருமானத்தை முறையாக கணக்கிட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் 27ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தொடர்பான விவரங்கள் தவறாகக் கணக்கிடப்பட்டன.
மானியப் பிரிவு நிர்ணயிக்கப்பட்டோரில் மூன்று விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே பாதிப்படைந்ததாக அமைச்சு கூறியது.
அவர்களில் 19,000 பேர் சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள திட்டங்களின்கீழ் மானியம் பெறுகின்றனர்.
எஞ்சியுள்ள கிட்டத்தட்ட 1,000 பேர் பாலர் பருவ மேம்பாட்டுக் கழகம், சமுதாய, குடும்ப அமைச்சு, கல்வி அமைச்சு, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றிடமிருந்து மானியம் பெறுகின்றனர்.

