ரஹ்மாத்தான் லில் அலாமின் அறநிறுவனம் (ஆர்எல்ஏஎஃப்), நேப்பாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கத் தான் திரட்டிய 240,000 வெள்ளியைக் காசோலையாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் சனிக்கிழமை (அக்டோபர் 17) ஒப்படைத்தது.
அதோடு, இளையர்கள் வழிநடத்தும் 13 திட்டங்களுக்கு 128,000 வெள்ளி மதிப்பிலான மானியங்களையும் ஆர்எல்ஏஎஃப் சனிக்கிழமை வழங்கியது. இவற்றுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வெளியுறவு, உள்துறை அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அனைத்துலக அளவில் தான் மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளையும் தாண்டி உள்ளூர் சமூகங்களை வலுப்படுத்தத் தான் கடப்பாடு கொண்டுள்ளதை சமூக மானியங்களை வழங்கியதன் மூலம் ஆர்எல்ஏஎஃப் வெளிப்படுத்தியது. சமூகத் தேவைகளை அடையாளம் கண்டு செயல்படுவது, சமூக ஒற்றுமையை ஊக்குவிப்பது, அர்த்தமுள்ள தொண்டூழியத்தை ஊக்குவிப்பது ஆகிய செயல்களை உள்ளடக்கும், இளையர்கள் வழிநடத்தலில் அடிமட்டத்திலிருந்து தொடங்கப்படும் திட்டங்களுக்கு இந்த மானியங்கள் ஆதரவளிக்கின்றன.
மானியங்களின் வாயிலாக ஆர்எல்ஏஎஃப், சிந்தனைகளையும் ஆசைகளையும் தாண்டி பிறரின் வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரியும் மாற்றங்களை வரவைக்கும் திட்டங்களை உருவாக்கி, வழிநடத்தி, செயல்படுத்த இளையர்களுக்குத் தேவையான வளங்களையும் வாய்ப்புகளையும் அளிக்கிறது.
ஆர்எல்ஏஎஃப் இவ்வாண்டு மொத்தம் 192,000 வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான 20க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
