காலாங்கில் தேசிய விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள கூரையுடன் கூடிய 888 மீட்டர் சுற்றுப்பாதைக்கு ‘கிரேட் ஈஸ்டர்ன் புரோமெனேட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சமூக நிகழ்ச்சிகளுக்கும் சமுதாய ஒன்றுகூடல்களுக்குமான துடிப்புமிகு நடுவமாக அது உருவெடுக்கவிருக்கிறது.
பாதை, நிறுவனத்தின் சிவப்பு, நீல நிறங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் மூலம் துடிப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலாங் குழுமத்துடன் கொண்டுள்ள நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அங்கு புதிய உற்சாகத்தையும் நடவடிக்கைகளையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன். அவற்றின் மூலம் குடும்பத்தினர், உடலறுதி ஆர்வலர்கள், சமூகத்தினர் என அனைவருக்கும் சிறந்த அனுபவத்தைக் கொடுக்க எண்ணியுள்ளது அது.
இருதரப்பும் பங்காளித்துவம் குறித்துக் கருத்துரைத்தன.
“சிங்கப்பூர் மக்கள் தேசிய அரங்கத்தைச் சுற்றியுள்ள பாதைக்கு நடக்கவும் ஓடவும் துடிப்போடு இருக்கவும் வருகின்றனர். காலாங்கில் ஏற்கெனவே ஓசிபிசி சைக்கிள், கிரேட் ஈஸ்டர்ன் மகளிர் ஓட்டம் என இரண்டு பெரிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சமூகத்திற்கான எங்களின் பங்களிப்பையும் பங்காளித்துவத்தையும் இங்கு விரிவுபடுத்துவதுதான் அடுத்த கட்ட நடவடிக்கை,” என்று கிரேட் ஈஸ்டர்ன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரேக் ஹிங்ஸ்டன் கூறினார்.
“சமூகத்துடன் பிணைப்பை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக இங்கு அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளை உருவாக்கத் தொடர்ந்து முயற்சிகளை எடுக்கிறோம். நிதி நிர்வாகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளையும் சமூக விளையாட்டு நிகழ்ச்சிகளையும் மேலும் சிறந்த முறையில் வழங்க கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடனான பங்காளித்துவத்தை நீட்டிப்பதில் பெருமை கொள்கிறோம்,” என்றார் காலாங் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குவெக் சுவீ குவான்.
புதிய பாதையின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) ‘சிறந்த குடும்ப விளையாட்டு தினம்’ அனுசரிக்கப்பட்டது. ஏறக்குறைய 350 பேர் அதில் பங்கெடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு விளையாட்டுகளுக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினர், நிதி தொடர்பான முக்கிய அம்சங்களைக் கற்றுக்கொள்ள உதவும் இருவழித் தொடர்பு விளையாட்டும் இருந்தது.

