நான்காம் காலாண்டில் ‘கிரேட் ஈஸ்டர்ன்’ லாபம் 79% அதிகரிப்பு

நான்காம் காலாண்டில் ‘கிரேட் ஈஸ்டர்ன்’ லாபம் 79% அதிகரிப்பு

2 mins read
$241.4 மில்லியனாகப் பதிவானது
7cb2898b-6fb2-48dc-95f9-23780834b0c7
2025ஆம் ஆண்டு முழுவதும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் நிகர லாபம் 21 விழுக்காடு அதிகரித்து $1.2 பில்லியனாகப் பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓசிபிசி வங்கியின் முதலீட்டுப் பிரிவான கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம் கடந்த டிசம்பருடன் நிறைவடைந்த நான்காம் காலாண்டுக்கான நிகர லாபம் 79 விழுக்காடு அதிகரித்து $241.4 மில்லியனாகப் பதிவானதாகத் தெரிவித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு அதே காலகட்டத்தில் அது $134.8 மில்லியனாகப் பதிவானது.

முதலீட்டு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததும் வருவாய் தொடர்ந்து அதிகரித்ததும் நிகர லாபம் அதிகரித்ததற்குக் காரணங்கள் என்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) கிரேட் ஈஸ்டர்ன் கூறியது.

நிதியாண்டு 2025 முழுவதற்குமான நிகர லாபம் $1.2 பில்லியனாகப் பதிவானதாக கிரேட் ஈஸ்டர்ன் தெரிவித்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில் அது 21 விழுக்காடு குறைவாக $995.3 மில்லியனாகப் பதிவானது.

நிதியாண்டு 2025ல் பங்குதாரர்களின் நிதி மூலம் நிறுவனத்திற்குக் கிடைத்த லாபம் 48 விழுக்காடு அதிகரித்து $390.9 மில்லியனாகப் பதிவானதாகக் கூறப்பட்டது.

2025 நான்காம் காலாண்டில் புதிய காப்புறுதி விற்பனை மூலம் ஈட்டப்பட்ட வருவாய் வளர்ச்சி வலுவாக இருந்ததாக நிறுவனம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில், காப்புறுதிச் சந்தையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பல திட்டங்கள் உட்பட மொத்தம் 18 புதிய காப்புறுதித் திட்டங்களைக் கடந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தியதாக கிரேட் ஈஸ்டர்ன் கூறியது.

ஒரு காப்பீட்டு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஈட்டிய புதிய காப்புறுதி விற்பனையின் அளவை மதிப்பிட மொத்த புதிய விற்பனை மதிப்பு (Total Weighted New Sales) எனும் அளவீடு பயன்படுத்தப்படுகிறது. நான்காம் காலாண்டில் அது கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டைவிட 5 விழுக்காடு அதிகரித்து $453.7 மில்லியனாகப் பதிவானது. இருப்பினும் முழு ஆண்டுக்குமான மொத்த புதிய விற்பனை மதிப்பு 15 விழுக்காடு குறைந்தது.

கிரேட் ஈஸ்டர்ன் நிறுவன இயக்குநர் வாரியம், நிதியாண்டு 2025க்கான லாப ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 30 காசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு அது 40 காசாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்