நாடாளுமன்றத்தில் நவம்பர் 12ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய சட்ட மசோதாவின்கீழ், பயனாளர்கள் தனிப்பட்ட அளவில் உணவை இறக்குமதி செய்வதில் கூடுதல் நீக்குப்போக்குத் தன்மையைப் பெறுவர்.
உணவுப் பாதுகாப்பு மசோதாவின்கீழ் ஒருவர் அனைத்து வகை உணவுப்பொருள்களும் என மொத்தம் 15 கிலோ உணவைத் தனிப்பட்ட பயன்பாட்டுக்காகக் கொண்டுவரலாம். இணையத்தில் வாங்கப்படும் உணவுக்கும் இது பொருந்தும்.
தற்போது இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள், அந்தந்த உணவுவகைகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஐந்து கிலோ இறைச்சியை ஒருவர் கொண்டுவரும்போது அதில் இரண்டு கிலோ மட்டுமே உறைந்த நிலையில் இருக்கலாம்.
ஆனால், உத்தேசச் சட்டத்தின்படி இறைச்சி, மீன், முட்டைகள், பழங்கள், காய்கறிகள் என அனைத்து உணவுவகைகளையும் ஒருசேர 15 கிலோ என்ற இறக்குமதி வரம்புடன் கொண்டுவர இயலும்.
மேலும், தற்போதைய விதிமுறைகளின்படி சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள், நிபந்தனைகள் ஆகியவற்றுக்கு இணங்க, அனுமதி வழங்கப்பட்ட நாடுகளின் சான்றிதழ் பெற்ற தரப்புகளிடமிருந்து மட்டுமே இறைச்சிசார் உணவை உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால், புதிய மசோதாவின்கீழ், பலராலும் உட்கொள்ளப்படும் இறைச்சி வகைகளை மேலும் அதிக நாடுகளிலிருந்து சிங்கப்பூர்வாசிகளும் வருகைதருவோரும் கொண்டுவரலாம்.
இருப்பினும், விலங்குகளின் ரத்தம், வேட்டையாடப்பட்ட இறைச்சி போன்றவை தொடர்ந்து தடைசெய்யப்படும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
உணவு தொடர்பான தற்போதுள்ள சட்டங்கள் யாவும் எட்டு வெவ்வேறு சட்டங்களின்கீழ் உள்ளதால் இப்புதிய சட்ட மசோதா அனைத்தையும் ஒருங்கிணைத்துவிடும். இதனால், வேளாண் துறையினர் முதல் உணவகங்கள் வரை உணவுத் துறையில் உள்ள அனைவரும் குழப்பமின்றி சட்டங்களைப் பின்பற்றுவர் என்றது சிங்கப்பூர் உணவு அமைப்பு.
தொடர்புடைய செய்திகள்