பெண்கள் உடல் நலனில் அதிக கவனம்: மசெக மகளிர் அணித் தலைவர் சிம் அன்

பெண்கள் உடல் நலனில் அதிக கவனம்: மசெக மகளிர் அணித் தலைவர் சிம் அன்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Sep 2026 - 9:41 pm

2 mins read

வாழ்க்கைத் தொழில் பாதையில் தொடக்கத்தில் ஏற்படும் மனவுளைச்சல், மாதவிடாய் நின்றதும் நடக்கும் உடல் நலப் பிரச்சினைகளைக் கையாள்வது போன்ற பல அம்சங்களில் பெண்களுக்கு உதவுவதில் அதிக கவனம் செலுத்தப்படும்.

இதனை மக்கள் செயல் கட்சியின் மகளிர் அணித் தலைவர் சிம் அன், ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் பெண்களுக்கான மாநாட்டில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

அம்மாநாடு சனிக்கிழமை (செப்டம்பர் 26) மாண்டரின் ஓரியன்டல் சிங்கப்பூர் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

அதிக முதியவர்கள் வாழும் இடமாக சிங்கப்பூர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மூப்படைந்த பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மக்கள்தொகையின் ஒட்டுமொத்த மூத்தோர்கள் நலனை உயர்த்த உதவும் என்று வெளியுறவு, உள்துறை அமைச்சுகளின் இரண்டாம் அமைச்சருமான சிம் அன் கூறினார்.

சிங்கப்பூரில் 85 வயதைக் கடந்த பத்தில் ஆறு குடிமக்கள் பெண்கள் என்ற அமைச்சர், சிறந்த முறையில் மூப்படையும் பெண்களால் அவர்களது குடும்பங்களும் நன்மை பெரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் செயல் கட்சியின் மகளிர் அணியை 2022ஆம் ஆண்டுமுதல் தலைமை ஏற்று வழிநடத்திவரும் திருவாட்டி சிம் அன், மாநாட்டில் கலந்துகொண்ட 400க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் சிறப்புரையாற்றினார். அதில் மசெக ஆர்வலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பங்காளிகள், கௌரவ அழைப்பில் கலந்துகொண்டோர் ஆகியோர் அடங்குவர்.

முதியோர் அதிகம் வாழும் நாடு என்பதை மதிப்பிட ஏற்படுத்தியுள்ள வரையறையை சிங்கப்பூர் கடந்துவிட்டது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்த மறுநாள் அமைச்சரின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள்தொகையில் 65 வயதைக் கடந்தோர் 21 விழுக்காட்டுக்கும் அதிகமானால் அந்நாடு முதியோர் அதிகம் வாழும் நாடு என்று ஐநா அமைப்பால் வகைப்படுத்தப்படுகிறது.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் தற்போது 21.4 விழுக்காட்டினர் 65 வயதைக் கடந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்
மக்கள்தொகைமக்கள் செயல் கட்சிமாநாடுஅமைச்சர்வெளியுறவு அமைச்சுஉள்துறை அமைச்சுமகளிர்