கிரேட்டர் செந்தோசா சுற்றுலாத் தலத்திற்கு வரும் பார்வையாளர்கள் இன்னும் அதிகமான அம்சங்களை எதிர்பார்க்கும் வகையில் அது மேம்படுத்தப்பட உள்ளது.
அதிகமான கடலோரப் பாதைகள் மற்றும் பசுமைப் பாதைகளுடன் நீர்முகப்பு நடைமேடையையும் அவர்கள் எதிர்பார்க்கலாம்.
அடுத்த இருபதாண்டுகளுக்கான மாபெரும் உருமாற்றத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் ‘கிரேட்டர் செந்தோசா பெருந்திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. செந்தோசா உல்லாச் தீவையும் புலாவ் பிரானித் தீவையும் உள்ளடக்கியது அந்தத் திட்டம்.
செந்தோசா கடலோர முகப்புகள், பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக அதிக நிகழ்விடங்களைக் கொண்டதாக மாற்றப்பட உள்ளன.
மேம்பாட்டுத் திட்டத்தில் இடம்பெறும் இந்த அம்சங்களையும் இன்னும் சில புதிய வசதிகளையும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வெள்ளிக்கிழமை (மே 8) அறிவித்தார்.
ரிசார்ட்ஸ் வோர்ல்ட் மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (மே 8) நடைபெற்ற சுற்றுப் பயணத்துறை மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், “120 ஹெக்டர் பரப்பளவுள்ள புலாவ் பிரானித் தீவில் புதிய ஹோட்டல்களுடன் சுற்றுப் பயண அனுபவங்களைப் பெறக்கூடிய வசதிகளும் அமைக்கப்படும். அதேநேரம் அந்தத் தீவின் இயற்கைவள அம்சங்கள் பாதுகாக்கப்படும்,” என்றார்.
மேம்பாட்டுப் பணிகள் நிறைவுற்ற பின்னர் கிரேட்டர் செந்தோசா அதன் தற்போதைய எண்ணிக்கையைவிட ஏறத்தாழ இருமடங்கு வருகையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரை 16.9 மில்லியன் பேர் அங்கு வருகையளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2019ஆம் ஆண்டு செந்தோசா-பிரானி பெருந்திட்டம் என அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புத்துயிர்த் திட்டம், மார்ச் மாதம் தனது முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியது.
செந்தோசாவையும் புலாவ் பிரானித் தீவையும் இணைக்கும் ஒரு புதிய போக்குவரத்து மையத்தை கெப்பல் துறைமுகத்தில் கட்டுவதற்கான பணிகள் அப்போது தொடங்கின.

