சிங்கப்பூரர்களின் செலவுகளின் அழுத்தத்தை நிர்வகிக்க தேவைப்படுவதை அரசாங்கம் தொடர்ந்து செய்யும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியளித்துள்ளார்.
வியாழக்கிழமை (பிப்ரவரி 12) தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவு திட்டம் 2026 உரையில் அவர் சில மாற்றங்களை அறிவித்தார்.
தகுதிபெற்ற சிங்கப்பூரர்களுக்கு வரவு சிறப்பு வழங்குதொகை $200 முதல் $400 வரை வழங்கப்படும்.
இந்தத் தொகை செப்டம்பர் 2026ல் தரப்படும்.
மேலும், சிங்கப்பூர்க் குடும்பங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் $500 சிடிசி பற்றுச்சீட்டுகளையும் பெறவிருக்கின்றனர்.
“நமது குடும்பங்கள் நமது சமுதாயத்தின் தூண்கள். கடந்த ஆண்டுகளில் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின்மூலம் சிங்கப்பூரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆதரவளிக்க குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கிவருகிறோம்,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.
இந்தப் பற்றுச்சீட்டுகள், பங்கேற்கும் உணவகங்கள், பேரங்காடிகள் எனச் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
1.4 மில்லியன் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு இது பயனளிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த ஆண்டு ஜனவரி தரப்படும் சிறப்பு வழங்குதொகை டிசம்பர் 2027 வரை செல்லுபடியாகும்.
சிங்கப்பூரர்களின் குடும்பங்களுக்கு அதிக ஆதரவும் உறுதியும் வழங்கப்படும் என பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பெரியவர்களிலிருந்து சிறியவர் மட்டுமல்லாது உடற்குறையுள்ளோருக்கும் இந்த மாற்றங்கள் உதவியுள்ளன.
வீவக குடியிருப்பு பேட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன்மூலம் பொது வீடுகள் அணுகத்தக்க மலிவான விலையில் இருப்பதையும் அரசாங்கம் உறுதிசெய்கிறது.
தகுதிபெறும் சிங்கப்பூர்க் குடும்பங்கள் $570 தொகை வரை யு-சேவ் தள்ளுபடியும் பெறவிருக்கின்றனர்.
வீடமைப்பு வளர்ச்சி கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் தகுதியுள்ள சிங்கப்பூர் குடும்பங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகள் இல்லாத பட்சத்தில் இந்த நிதியாண்டில் வழக்கமான ‘யு-சேவ்’ தள்ளுபடியைப் போல 1.5 மடங்கு அல்லது அதிகபட்சமாக $570 வரை வழங்கப்படும்.
இந்தத் தொகை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் விநியோகிக்கப்படும்.
இது ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போருக்குக் கிட்டத்தட்ட ஐந்துமாதப் பயனீட்டுக் கட்டணங்களையும், மூவறை, நாலறை வீடுகளில் வசிப்போருக்குக் கிட்டத்தட்ட இரண்டு மாதப் பயனீட்டுக் கட்டணங்களையும் ஈடுகட்டும்.
2026ஆம் ஆண்டுமுதல் கரிம வரி உயர்த்தப்பட்டதால் அதிகரித்துள்ள மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணங்களின் சுமையைக் குறைக்க இது உதவும்.
“சிங்கப்பூரர்கள் வாழ்க்கைச் செலவின அழுத்தங்களைச் சமாளிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் தொடர்ந்து செய்யும் இது எவ்வளவு காலம் தேவையோ அவ்வளவு காலம் நீடிக்கும்,” என்று திரு வோங் கூறினார்.
கல்வி, வீட்டுவசதி, மருத்துவம், ஓய்வுக்காலம் ஆகிய பிரிவுகளில் சமூக ஆதரவு அமைப்பை அரசாங்கம் தொடர்ந்து ஆய்வுசெய்து மேம்படுத்தும்.
குடும்பங்கள், பெற்றோர், முதியவர்கள், உடற்குறையுள்ளோர், பராமரிப்பாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் இந்த ஆதரவு நீட்டிக்கப்படும் என்றும் பிரதமர் வோங் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் அனைவரையும் உள்ளடக்கிய, ஒற்றுமையான சமூகமாகவும், நாம் அனைவரும் பெருமையுடன் ‘நமது இல்லம்’ என்று அழைக்கும் இடமாகவும் திகழ்வதை உறுதிசெய்ய, நிலைத்தன்மையுடனும் பொறுப்புடனும் அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும்,” என்று அவர் கூறினார்.

