ஜூரோங் தீவில் சோதனை தரவு நிலையம் (data centre testbed) ஒன்று கட்டப்படவுள்ளது.
அந்நிலையம், பசுமை எரிசக்தி முறைகளைப் பயன்படுத்திப் பார்த்துச் சோதனையிடுவதற்காக உபயோகிக்கப்படும். இதுகுறித்து அதிகாரிகள் திங்கட்கிழமை (நவம்பர் 24) அறிவித்தனர்.
குறைவான அளவில் கரிமத்தைப் பயன்படுத்தும், சிங்கப்பூரின் ஆகப் பெரிய தரவு நிலையப் பூங்கா ஜூரோங் தீவில் அமைக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தீவில் 20 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட நிலத்தில் அப்பூங்கா கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, 25 காற்பந்துத் திடல்களின் பரப்பளவுக்குச் சமமாகும்.
முதன்முறையாகச் சிங்கப்பூரில் அமைக்கப்படும் இந்தத் தரவு நிலையம், சூரியசக்தி போன்ற பசுமை எரிசக்தி முறைகளில் இயங்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான, தீவிரமாக இயங்கும் கணினிக் கட்டமைப்புகளுக்கு வகைசெய்யும் அம்சங்களும் புதிய தரவு நிலையத்தில் இருக்கும்.
குறைவான அளவில் கரிமத்தைப் பயன்படுத்தும் தரவு நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில்தான் இந்தத் தரவு நிலையம் அமைக்கப்படும். இதை அமைப்பது தொடர்பிலான ஆய்வை ஜேடிசி அமைப்பும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் அடுத்த ஆண்டு தொடங்கும்.
ஜூரோங் தீவின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணம் ஜேடிசியும் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் திங்கட்கிழமை (நவம்பர் 24) ஆறு புதிய பங்காளித்துவங்களை அறிவித்தன. அவற்றில் ஜேடிசி-சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பங்காளித்துவமும் அடங்கும்.
ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், “ஒரு காலத்தில் திட்டத்தின் அளவையும் குறைந்த விலையில் பணிகளை மேற்கொள்வதையும் மையமாகக் கொண்டிருந்த எரிசக்தி, ரசாயனத் துறை, இப்போது புதிய தொழில்நுட்ப முறைகள், கரிமப் பயன்பாட்டைக் கைவிடுமாறு ஊக்குவிக்க தரப்படும் குரல், கூடுதல் தரத்துக்கான தேவை, மேலும் பசுமையான பொருள்கள் ஆகியவற்றால் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
அதனால், தொழில்துறைத் தீவான ஜூரோங் தீவு என்றும் போட்டித்தன்மையுடன் காலத்துக்கு ஏற்றவாறு விளங்க தன்னைத் தொடர்ந்து மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்று பேன் பசிபிக் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் திரு கான் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தரவு நிலையங்கள், மெய்நிகர் உலகை வடிவமைக்கும் நேரடிக் கட்டமைப்புகளாகும். அவ்வாறுதான் நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களையும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களையும் பயன்படுத்த முடிகிறது.

