உயரமான கட்டடங்களில் பசுமை: புதிய பாதுகாப்பு, பராமரிப்புத் தரநிலை

உயரமான கட்டடங்களில் பசுமை: புதிய பாதுகாப்பு, பராமரிப்புத் தரநிலை

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Oct 2026 - 5:48 pm

2 mins read

கட்டடங்களின் மேற்கூரைகளிலும் செங்குத்தான சுவர்களிலும் அமைக்கப்படும் பசுமைப் பகுதிகள் கணிசமாக அதிகரித்துவரும் நிலையில், அவற்றின் வடிவமைப்பு, பாதுகாப்பு, பராமரிப்பை மேம்படுத்துவதற்காகப் புதிய துறைசார்ந்த தரநிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

‘வானுயரக் கட்டடப் பசுமைப் பராமரிப்பு, பாதுகாப்புக்கான வடிவமைப்பு குறித்த சிங்கப்பூர் தரநிலை’ திட்டத்தில், மொட்டைமாடித் தோட்டங்கள், பசுமை மேல்மாடங்கள், பசுமைச் சுவர்கள் போன்றவை அடங்கும்.

தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் ஆல்வின் டான் சனிக்கிழமை (அக்டோபர் 17) அத்திட்டத்தை அறிவித்தார்.

“ஒரு பொதுவான தரநிலை அமைக்கப்படுவதன் மூலம், நல்ல வானுயரக் கட்டடப் பசுமை அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான புரிதல் வல்லுநர்கள், வணிகங்கள், வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் 2030ஆம் ஆண்டுக்குள் 200 ஹெக்டர் பரப்பளவிலான வானுயரக் கட்டடப் பசுமைப் பகுதிகளை உருவாக்க வேண்டும் என்ற அதன் தொடக்க இலக்கை ஏற்கெனவே மிஞ்சிவிட்ட நிலையில், அந்த அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டிறுதி நிலவரப்படி, தீவு முழுவதும் 255 ஹெக்டர் பரப்பளவுக்கும் அதிகமான மொட்டைமாடி, செங்குத்துப் பசுமைப் பகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில், சிங்கப்பூர் நிலவனப்புத் தொழில்துறைச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘கிரீன் தம்ப்ஸ் 2026’ (Green Thumbs 2026) என்ற மூன்று நாள் நிகழ்வில் உரையாற்றியபோது திரு டான் அதனைத் தெரிவித்தார்.

கட்டடங்களின் கான்கிரீட் அமைப்பைக் குறைத்து, நகர்ப்புறப் பசுமையை ஊக்குவிப்பதற்காக 2009ஆம் ஆண்டில் சிங்கப்பூர் முதன்முதலில் அப்பசுமைத் திட்டத்தைத் தொடங்கியது. அன்றிலிருந்து அத்துறை வளர்ச்சி கண்டு, நிலவனப்புக் கட்டடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், மேம்பாட்டாளர்கள், கட்டட உரிமையாளர்கள், தோட்டக்கலை நிபுணர்கள், பராமரிப்பாளர்கள் எனப் பலரையும் உள்ளடக்கிய ஒரு துறையாக விரிவடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்