கிரீன்லாந்து எதிர்காலம்: அமைதியான முறையில் தீர்வுகாண விவியன் வலியுறுத்து

கிரீன்லாந்து எதிர்காலம்: அமைதியான முறையில் தீர்வுகாண விவியன் வலியுறுத்து

2 mins read
d263c9f9-bf9c-4408-8ec6-d27b23aada93
கிரீன்லாந்து விவகாரத்தில் சட்டத்தின்படி அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். - கோப்புப் படம்: ஏஎஃபி

கிரீன்லாந்து பிரச்சினைகளுக்கு சட்டத்தின்படி அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கிரீன்லாந்து விவகாரத்தில் அனைத்துலக சட்டம், இறையாண்மை உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு ஏற்ப அமைதியான முறையில் தீர்வு எட்டப்பட, சிங்கப்பூர் நாட்டம் கொள்கிறது என்றும் டாக்டர் விவியன் சொன்னார்.

ஆசிய பசிபிக் வட்டாரத்தின் பாதுகாப்பிலும் முன்னேற்றத்திலும் அமெரிக்கா தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்ட வெளியுறவு அமைச்சர் பாலகிருஷ்ணன், அமெரிக்காவுடனான நீண்டகால, உறுதியான பங்காளித்துவத்தை சிங்கப்பூர் மதிக்கிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ‘‘டென்மார்க் உட்பட பல ஐரோப்பிய நாடுகளுடனான நட்புறவையும் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் ஒத்துழைப்பையும்  சிங்கப்பூர் கொண்டுள்ளது,’’ என்றார்.

“அனைத்துலகச் சட்டம், பன்முகத்தன்மையை சிங்கப்பூர் தொடர்ந்து நிலைநிறுத்தும். ஏனெனில், இந்தக் கொள்கைகள் சிறிய நாடுகளைப் பாதுகாக்கின்றன; மேலும் உலகளாவிய அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அவை பங்களிக்கின்றன,” என்றும் விவரித்தார் அமைச்சர் விவியன்.

வெனிசுவேலாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அமெரிக்கா அடுத்து கிரீன்லாந்தைக் குறிவைத்தது. ஜனவரி மாதத் தொடக்கத்தில், கனிம வளங்கள் மிகுந்த கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது என்ற அதிபர் டோனல்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கிரீன்லாந்தை அமெரிக்க ஆட்சியின்கீழ் கொண்டுவருவதை ஆதரிக்காத நாடுகளுக்கு வரிகளை விதிக்கப்போவதாகவும் திரு டிரம்ப் கூறியிருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே, கிரீன்லாந்தை கைவசப்படுத்த முயலும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்து வரும் கனடா, பிரான்ஸ், ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளன.

அதன்படி உள்ளூர் அரசாங்கத்திற்கு தங்களின் வலுவான ஆதரவைக் காட்டும் வகையில், கிரீன்லாந்தில் தங்கள் தூதரகங்களைத் திறக்கப்போவதாக அவை அறிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்