மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியில் உள்ள கிட்டத்தட்ட 10,000 குடும்பங்கள் சமையல் எண்ணெய், முட்டை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களை $1க்கு வாங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினத்துக்கு ஈடுகொடுக்க உதவும் வகையில் இந்தத் திட்டம் அங்கு அறிமுகம் கண்டுள்ளது.
‘மை $1 டீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தது ஒரு சிங்கப்பூரர் உள்ள குடும்பங்கள் $1 செலவழித்து மூன்று சீட்டுகளை வாங்கலாம். இவற்றைக் கொண்டு அந்த நபர் 2.5 கிலோகிராம் எடைகொண்ட அரிசி, ஒரு லிட்டர் அளவு சமையல் எண்ணெய் அல்லது 30 முட்டைகளை வாங்கலாம்.
இந்தச் சீட்டுகள் யாவும் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியில் உள்ள சமூக மன்றங்களில் டிசம்பர் 30ஆம் தேதியிலிருந்து ஜனவரி 17ஆம் தேதிவரை விற்பனையாயின. இவை ஜனவரி 18, 19ஆம் தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) இரு நாள்களில் மளிகைப் பொருள்கள் வாங்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருள்களின் விலைகள் ஏறி வாழ்க்கைச் செலவினம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
குழுத்தொகுதியில் லிம்பாங் தொகுதியைப் பிரதிநிதிக்கும் திரு வோங், சமூக மேம்பாட்டு மன்றங்கள் வழங்கும் பற்றுச்சீட்டுகள் போன்ற திட்டங்களால் சிங்கப்பூரர்களுக்கு உதவி செய்து வருவதாகக் கூறினார்.
“உலகளவில், உயர்ந்து வரும் பொருள்களின் விலையால் அனைவருக்கும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது,” என்று 888 பிளாசா இன் உட்லண்ட்ஸ் கட்டடத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து திரு வோங் குறிப்பிட்டார்.
“எனினும், சிங்கப்பூரர்கள் விலை உயர்வைச் சமாளிக்க அரசு ஆன அனைத்தையும் செய்து வருகிறது,” என்று பிரதமர் லாரன்ஸ் வோங் விளக்கினார்.